பள்ளி சென்று படிக்க முடியாதவர்கள் கல்வியை தொடருவதற்கான மத்திய அரசின் என்.ஐ.ஓ.எஸ். கல்வித்திட்ட சான்றிதழை அங்கீகரித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
என்.ஐ.ஓ.எஸ். கல்வித்திட்டம்
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தேசிய திறந்தநிலை பள்ளி எனப்படும் என்.ஐ.ஓ.எஸ். செயல்படுகிறது.
அதாவது, பள்ளிகளில் சென்று படிக்க முடியாத 14 வயதுக்கு மேற்பட்டோருக்கான கல்வி முறையாகும்.
சி.பி.எஸ்.இ. மற்றும் தனி பாடத்திட்டத்தை கொண்ட இந்த கல்வி முறையில் சேர்ந்து படிப்பவர்களுக்கு அவரவர் தேர்வு செய்யும் வகுப்புக்கு ஏற்ப 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு ஆகியவற்றுக்கு இணையான ஆரம்பக்கல்விச்சான்றிதழ் வழங்கப்படும். 10-ம் வகுப்புக்கான உயர் நிலைக்கல்வியும், 12-ம் வகுப்புக்கான மேல்நிலைக்கல்வியும் நடத்தப்படுகிறது.
இது தவிர, தொழிற்கல்வி, சுயதொழில் கல்வி ஆகியவையும் கற்றுத்தரப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் என 7,400 கல்வி மையங்கள் செயல்படுகின்றன.
இந்த கல்வித்திட்டத்தில் படிக்க விரும்புபவர்கள் அந்தந்த கல்வி மையங்களில் பதிவு செய்து ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் போதுமானது. தினசரி வகுப்புகள் கிடையாது. தொலைநிலைக்கல்வி போல, பள்ளிப்படிப்பை படிக்கும் வசதி இந்த கல்வி முறையில் உள்ளதால், பள்ளிப்பருவத்தில் படிக்க தவறிய மாணவ, மாணவிகள் என்.ஐ.ஓ.எஸ். திட்டத்தில் சேர்ந்து 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வெழுதி சான்றிதழ் பெறுகின்றனர்.
தமிழக அரசு அங்கீகாரம்
இந்த திட்டத்தில் தேர்வெழுதி சான்றிதழ் பெற்றவர்கள் உயர்கல்வி கற்கவும், அரசு வேலைவாய்ப்புக்கும், வெளிநாடுகளில் உயர்கல்வி கற்பதற்கும் தகுதியானது என்று மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கிடையே, இந்த சான்றிதழ் செல்லாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்டது.
அதனை தொடர்ந்து, தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் கடந்த மே மாதம் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
அதில், என்.ஐ.ஓ.எஸ். கல்வித்திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ் பெற்றவர்கள் அரசுப்பணியில் சேர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் தகுதியானது இல்லை என்றும், உயர்கல்வியில் சேர்வதற்கு மட்டும் பரிசீலனை செய்யலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது. இதனால், மத்திய அரசு அங்கீகாரம் வழங்கிய இந்த கல்வித்திட்டத்தில் சான்றிதழ் பெற்ற பலரும் அவதிக்குள்ளாயினர்.
இந்த நிலையில், என்.ஐ.ஓ.எஸ். கல்வித்திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு படித்து சான்றிதழ் பெற்றவர்கள் தமிழக அரசின் வேலை வாய்ப்புக்கும், உயர்கல்விக்கும் தகுதி வாய்ந்தது, அதாவது தமிழக அரசின் 10,12-ம் வகுப்பு சான்றிதழுக்கு இணையானது என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக பள்ளி சென்று படிக்க முடியாதவர்கள், இந்த திட்டத்தில் மேல்நிலைக்கல்வியை முடித்து கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தங்களது மேற்படிப்பை தொடர வாய்ப்பு கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment