தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 1,000 கவுரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்ய உயர்கல்வித்துறை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அரசு கல்லூரி
தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், 10 ஆயிரத்து 79 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. இதில் 7 ஆயிரத்து 360 காலிப்பணியிடங்கள் உள்ளன.
இந்த காலிப்பணியிடங்களை நிரப்பிடும் வரையில், மாணவர்களின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளில் எந்தவித சுணக்கமும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக இந்த காலிப்பணியிடங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
அந்த வகையில், தற்போது தமிழகம் முழுவதும் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ரூ.25 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 7 ஆயிரத்து 360 உதவிப் பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
4,000 உதவி பேராசிரியர்
இந்த சூழலில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டது. இதற்காக, யு.ஜி.சி. நெட் தகுதியுடன் உள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்ப பதிவும் நடைபெற்றது. போட்டித் தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் நடப்பதாக இருந்தது.
ஆனால், நிர்வாக காரணங்களால் உதவி பேராசிரியர் நியமனத்துக்கான போட்டித் தேர்வு நியமனம் ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. விரைவில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வுகள் நடத்த உயர்கல்வித்துறை வேகம் காண்பித்து வருகிறது.
புதிய கவுரவ விரிவுரையாளர்கள்
இந்த நிலையில், தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 1,000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உயர்கல்வித்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே, கடந்த ஆண்டு 1895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், தேர்வான கவுரவ விரிவுரையாளர்களில், 322 பேர் சில காரணங்களால் கல்லூரிகளில் சேரவில்லை.
இதனால், ஏற்கனவே காலியாக உள்ள 322 கவுரவ விரிவுரையாளர் பணியிடம் மற்றும் புதிதாக 746 கவுரவ விரிவரையாளர்கள் பணியிடங்கள் உருவாக்கி மொத்தம் 1,068 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உயர்கல்வித்துறை திட்டமிட்டு வருவதாக உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் உயர்கல்வித்துறையில் இருந்து வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment