கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட குரூப்-4 பதவிகளில் வரும் காலிபணியிடங்களுக்கான அறிவிப்பை தேர்வை நடத்தக்கூடிய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.
அப்போது 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு, அதற்கு 20 லட்சத்து 36 ஆயிரத்து 777 பேர் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி நடைபெற்றது. 20 லட்சத்து 36 ஆயிரத்து 777 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள்.
தேர்வு நடந்து முடிந்த பிறகு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை டி.என்.பி.எஸ்.சி. அதிகரித்தது. அதன்படி, 2 முறை காலி இடங்களை அதிகரித்து, தற்போது 8 ஆயிரத்து 932 ஆக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டு அதிகம் பேர் எழுதக்கூடிய இந்த தேர்வுக்கான முடிவு எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த மாதம் இறுதிக்குள் தேர்வு முடிவு வெளியாகும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
அதற்கேற்றாற்போல், பணிகளும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்வு முடிவு வெளியிடுவது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment