தஞ்சை மாவட்டத்தில் விவசாய குடும்ப பின்னணி கொண்ட மாணவி கனிஷ்கா 12-ம் வகுப்பு பொது தேர்வில் 599 மதிப்பெண்ணும், நீட் நுழைவு தேர்வில் 613 மதிப்பெண்ணும் பெற்றார்.
இவருக்கு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்டபடிப்பு பயில சேர்க்கை ஆணை கிடைத்துள்ளது.
ஏழ்மையான விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் தனது படிப்பு செலவுக்கு உதவிட வேண்டி பல தொண்டு நிறுவனங்களை மாணவி கனிஷ்கா அணுகி உள்ளார். அதில் ஒன்றான ஆற்றுப்படை அறக்கட்டளையின் வழிகாட்டுதலில் தி.மு.க. இளைஞரணி அறக்கட்டளைக்கு கோரிக்கை மனுவை அளித்திருந்தார்.
உடனடியாக இக்கோரிக்கையை ஏற்ற இளைஞரணி செயலாளரும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அக்கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசி முதலாம் ஆண்டிற்கான கல்வி கட்டணத்தில் ரூ.2 லட்சம் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும், அடுத்து வரவுள்ள 4 ஆண்டுகளுக்கும் தொடர்ந்து கல்வி கட்டணத்தில் ரூ.2 லட்சம் குறைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
இந்தாண்டு மருத்துவ கல்வி கட்டணத்திற்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது இல்லத்தில் வைத்து மாணவி கனிஷ்காவிடம் வழங்கினார் அடுத்து வர உள்ள 4 ஆண்டுகளுக்கும் தொடர்ந்து ரூ.2 லட்சமும் இளைஞரணி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்வின்போது, ஆற்றுப்படை அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் கார்த்திகேயன் உடனிருந்தார்.
No comments:
Post a Comment