தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மாணவ- மாணவிகளின் நலனுக்காக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் படித்து வரும் பிளஸ்-2 மாணவர்களுக்கு அகப்பயிற்சி அளித்து வருகிறது.
இந்த பயிற்சியை முடித்தவர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்துவதற்கு ஏதுவாக ஆதார் பதிவு அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் மேற்கொள்ளப்படுகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி சில மோசடி கும்பல்கள் மாணவ-மாணவிகளின் பெற்றோரை வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக கல்வித் துறைக்கு புகார் வந்துள்ளது.
அவ்வாறு மோசடியில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகளின் பெற்றோரை அணுகி கல்வித் துறையில் இருந்து ஊக்கத்தொகை பெற்றுத் தருவதாக கூறி வாட்ஸ்-அப் மூலம் ‘கியூ ஆர் கோடு' அனுப்பி அதனை ஸ்கேன் செய்யச் சொல்லி வங்கி கணக்கில் இருந்து ஆயிரக்கணக்கில் பணத்தை எடுத்திருக்கின்றனர். எனவே மோசடி கும்பலிடம் பெற்றோர் மேலும் பணத்தை இழப்பதை தடுக்கும் வகையில், பள்ளியில் பெற்றோருக்கு நடத்தும் கூட்டத்தின்போது, ஊக்கத்தொகை தொடர்பாக அரசு தரப்பில் யாரும் பேசமாட்டார்கள் என்பதை தெளிவாக எடுத்துக்கூறி உஷாராக இருக்க அறிவுறுத்துவதோடு, வங்கி கணக்கு விவரங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
No comments:
Post a Comment