நேர்முகத் தேர்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்..! - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 19 October 2024

நேர்முகத் தேர்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்..!

நேர்முகத்தேர்வு வாழ்வின் அடுத்த அத்தியாயத்தின் வாசல் கதவு. நேர்முகத்தேர்வை முறையான புரிதலுடன் அணுகுபவர்களுக்கு மட்டுமே அடுத்த அத்தியாயத்திற்கான கதவு திறக்கப்படுகிறது. வேலையில் சேருவதற்கு கனவுகளோடு காத்திருக்கும் பலரும் அஞ்சுவதற்கு காரணம் இந்த நேர்முகத்தேர்வு தான். மேலும் சரியாக திட்டமிடாத காரணத்தால் நேர்முகத் தேர்வில் கோட்டை விட்டவர்கள் பலர் உண்டு. 
அவ்வாறு அவர்கள் கண்ட தோல்வி சம்பவங்களே பலருக்கு நேர்முகத் தேர்வின் மீது அச்சம் ஏற்பட காரணமாகிறது. பெரும்பாலும் நேர்முகத் தேர்வில் அநேகம் பேர் கோட்டை விடுவதற்கான காரணங்களில் சில.. 

 * தேடல் நேர்முகத் தேர்விற்கு செல்லும் பலரும் கண்டு கொள்ளாத மிக முக்கியமான விஷயம் இது. பணி மற்றும் அலுவலகத்தை பற்றிய தகவல்களை ஏதும் அறியாமல் நேர்முகத்தேர்விற்கு சென்றால் மேலாளர் உங்களுக்கு பணியின் மீது ஆர்வம் இல்லை என்று எண்ணக்கூடும். எனவே பணி, பணியிடம் என அலுவலகம் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இது மேலாளரின் எதிர்பார்பை பூர்த்தி செய்ய உதவும். 

 * நேர மேலாண்மை இது சாதாரணமான விஷயமாக தெரியலாம். ஆனால் நீங்கள் காலத்தின் முக்கியத்துவத்தை எந்த அளவிற்கு உணர்ந்து செயல்படுகிறீர்களோ அது அந்த அளவிற்கு மேலாளரின் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்க்க உதவும். எனவே நேர்முகத்தேர்வுக்கு தயாராகும் போதே தேர்விற்கு செல்லும் இடம், போக்குவரத்து, புறப்படும் நேரம் என எல்லாவற்றையும் குறித்து திட்டமிட்டுக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே அங்கு இருப்பதற்கு ஏற்ற வகையில் விவேகமாக செயல்படுங்கள். ஏனெனில் உங்கள் எதிர்கால பயணத்திற்கு டிராபிக் ஒரு தடையாகி விடக்கூடாது. 

தோற்ற பொலிவு நேர்முகத்தேர்வை பொறுத்தமட்டில் ஆடையின் பங்கு என்பது மிக முக்கியமானது. பார்த்தவுடன் உங்கள் மீது நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்துவது உங்கள் ஆடை தான். எனவே டீ-சர்ட், ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அறவே தவிர்த்து விடுங்கள். 

உரையாடல் உங்கள் குணநலனை பற்றி மேலாளருக்கு உணர்த்துவது நீங்கள் பேசும் விதம் தான். அவர் கேள்வி கேட்கும் பொழுதும் சரி, நீங்கள் பதில் சொல்லும் போதும் சரி நீங்கள் நேராக அவரின் கண்களை பார்த்து பேசினால் தான் நீங்கள் தைரியமான, திறமையான நபர் என்பதை அவரால் அறிந்து கொள்ள முடியும். மேலும் நீங்கள் பேசுகின்ற வார்த்தைகளும் நேர்காணல் நடத்துபவர்கள் கேட்டு கேட்டு சலிப்படைந்த வார்த்தைகளாக இல்லாமல் புதியதாக இருந்தால் உங்களால் நிச்சயம் அவர்களை கவர முடியும். 

கேள்வி கேட்பது பொதுவாகவே நேர்முகத்தேர்வில் பங்கேற்பவர்களிடம் அங்குள்ள அதிகாரிகள் நீங்கள் ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் கேட்க வேண்டுமா என்று கேட்பார்கள். அப்பொழுது பெரும்பாலானோர் எந்த கேள்வியும், சந்தேகமும் இல்லை என்று கூறிவிடுவார்கள். நீங்கள் அவ்வாறாக இல்லாமல் உங்கள் மனதில் தோன்றும் நியாயமான கேள்வி, சந்தேகங்களை கேட்டீர் களேயானால் நீங்கள் மற்றவர்களிடமிருந்து தனித்து தெரிவீர்கள். மேலும் அதிகாரிகள் உங்களை தேர்வு செய்வதற்கு இது தூண்டுதலாக அமையும்.

No comments:

Post a Comment