அரசு பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள் பிரான்ஸ் நாட்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டு நிறுவனம்
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை அரசு பள்ளி மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப் நிறுவனத்துடன், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை ஒப்பந்தம் மேற்கொண்டது.
அதன் அடிப்படையில் தற்போது முதல்கட்டமாக சில குறிப்பிட்ட பள்ளிகளில் ‘டீல்ஸ்' என்ற பாடத்திட்டத்தை கொண்டு வந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மாணவ-மாணவிகளுக்கு அடிப்படை பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் கற்பித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு நிறுவனமும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை வழங்க முன் வந்துள்ளது.கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரான்ஸ் கல்வி சுற்றுலா சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிரான்ஸ் நாட்டில் உள்ள ‘டசால்ட் சிஸ்டம்ஸ்' நிறுவனத்துக்கு சென்றிருந்த போது இந்த தகவலை அந்த நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
ஏ.ஐ. தொழில்நுட்ப பயிற்சிகள்
ஏற்கனவே இந்த நிறுவனம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான சிறப்பு மையம்' (டான்கேம்) வாயிலாக 20 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு உயர் தொழில்நுட்ப பயிற்சியை வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்போது ஏ.ஐ. தொழில்நுட்ப பயிற்சியையும் வழங்க திட்டமிட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தங்கள் நிறுவனத்தால் முடிந்த அனைத்துவிதமான பயிற்சிகளை வழங்க காத்திருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் வலரி பெரட், தியர் செவ்ரோட், டோம்னிக் ஆண்டர்சன் ஆகியோர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கூறினர்.
இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ், இணை இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment