ரூ.10 லட்சம் கடனுக்கு 3 சதவீத வட்டி தள்ளுபடி உயர்கல்வி மாணவர்களுக்கு பிணையில்லா கடன் வழங்கும் ‘வித்யாலட்சுமி’ திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல் - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 7 November 2024

ரூ.10 லட்சம் கடனுக்கு 3 சதவீத வட்டி தள்ளுபடி உயர்கல்வி மாணவர்களுக்கு பிணையில்லா கடன் வழங்கும் ‘வித்யாலட்சுமி’ திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்

தரமான உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு பிணையில்லா கல்வி கடனும், 3 சதவீத வட்டி தள்ளுபடியும் அளிக்கும் ‘பிரதமர்-வித்யாலட்சுமி’ திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. 
பண தட்டுப்பாடு தடை அல்ல பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ‘பிரதமர்-வித்யாலட்சுமி’ திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தகுதிவாய்ந்த மாணவர்கள், உயர்கல்வி படிப்பதற்கு பண தட்டுப்பாடு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, தரமான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு பிணை இல்லாமலும், உத்தரவாதம் இல்லாமலும் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் கல்விக்கடன் அளிக்கப்படும். படிப்புக் கட்டணம் மற்றும் படிப்பு தொடர்பான இதர செலவினங்களை முழுமையாக ஈடுகட்டும்வகையில் கடன் வழங்கப்படும். 
வட்டி தள்ளுபடி தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசை அமைப்பின் (என்.ஐ.ஆர்.எப்) தரவரிசை பட்டியலில், முதல் 100 இடங்களை பிடிக்கும் தரமான உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். அப்பட்டியலில் 101 முதல் 200 இடங்களை பிடிக்கும் மாநில அரசுகளின் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேருவதற்கும் பொருந்தும். ஆண்டுதோறும் தரவரிசை பட்டியல் மாற்றி அமைக்கப்படும். முதல்கட்டமாக, 860 தரமான உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் 22 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தின் பலன்களை பெறலாம். மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்கும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம்வரையிலான கல்வி கடனுக்கு 3 சதவீத வட்டி தள்ளுபடி அளிக்கப்படும். ஆண்டுக்கு 1 லட்சம் மாணவர்களுக்கு வட்டி தள்ளுபடி அளிக்கப்படும். 
ரூ.3,600 கோடி ஒதுக்கீடு அரசு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப கல்வி படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 2024-2025 கல்வி ஆண்டு முதல் 2030-2031 கல்வி ஆண்டுவரை இத்திட்டம் அமல்படுத்தப்படும். இதற்காக ரூ.3 ஆயிரத்து 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 7 ஆண்டுகளில் 7 லட்சம் மாணவர்கள் வட்டி தள்ளுபடி சலுகை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
உணவு கழகத்தில் ரூ.10,700 கோடி முதலீடு மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய உணவு கழகத்தில் ரூ.10 ஆயிரத்து 700 கோடி மதிப்புள்ள முதலீட்டை மத்திய அரசு மேற்கொள்ள பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு ஒப்புதல் அளித்தது. வேளாண் துறையை வலுப்படுத்தவும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் நலன் கருதியும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்திய உணவு கழகத்தின் வட்டி சுமை குறைவதுடன், மத்திய அரசின் மானிய சுமையும் குறையும்.இந்த முதலீட்டால், இந்திய உணவு கழகத்தின் செயல்பாடுகள் அதிகரிக்கும் உணவு தானிய கொள்முதலை தீவிரப்படுத்தும். இத்தகவல்களை மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment