அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் அதற்கு ஏற்ப 2026-ம் ஆண்டுக்குள் 19 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
அமைச்சர் திடீர் ஆய்வு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பெருமூச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை கவனித்து, மாணவர்களின் கற்றல் திறன், வாசிப்பு திறன்கள் குறித்து ஆய்வு செய்தார்.
பாராட்டு
அப்போது காலை உணவுத் திட்டம் குறித்து தானாக முன்வந்து பேசிய மாணவரையும், கலைத்திருவிழா போட்டிக்காக வேடமணிந்து திறமையை வெளிப்படுத்திய மாணவிக்கும், மேலும், சிறப்புக் குழந்தையான மாணவர் பரத்தின் ஓவியத் திறமையைக் கண்டு மாணவனையும் அமைச்சர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் பள்ளியில் காலியாக இருந்த இடத்தை பார்த்து மாணவர்கள் விளையாடுவதற்கு ஏதுவாக இருக்கும் வகையில் அந்த இடத்தை தூய்மை செய்ய அறிவுறுத்தினார். தொடர்ந்து ஆசிரியர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து விரைவில் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
19 ஆயிரம் ஆசிரியர் பணியிடம்
நான் இங்கு திடீர் ஆய்வுக்கு வந்தேன். இங்கு படிக்கும் மாணவர்கள் வெட்கம், கூச்சம், பயம் எதுவும் இல்லாமல் படிக்கின்றனர். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் சிறந்து விளங்குகின்றனர். சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு கல்வித்துறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது. இதனால் புதிய வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வகங்கள், புதிய ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். அதற்கேற்ப 2026-ம் ஆண்டுக்குள் 19 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment