பணி நியமனத்தின்போது ஆசிரியர்களின் குற்றப்பின்னணி குறித்து போலீசார் மூலம் ஏன் விசாரிக்கக்கூடாது? என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
தலையிட முடியாது
தமிழ்நாட்டில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித்தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இடையே போட்டித்தேர்வு நடத்தி அதன்மூலம் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என 2018-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். அரசின் இந்த கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும் கூறியிருந்தார்.
ஏன் விசாரிக்கக்கூடாது?
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் ஐகோர்ட்டு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், அண்மைகாலமாக குற்ற வழக்குகளில் சிக்கும் ஆசிரியர்கள் குறித்து பல செய்திகள் நாளிதழ்களில் வருகின்றன. அதனால், ஆசிரியர்கள் நியமனத்தின்போது அவர்களது குற்றப்பின்னணி குறித்து போலீஸ் மூலம் ஏன் விசாரிக்கக்கூடாது? போலீஸ் வேலைக்கு சேர்பவர்கள், வக்கீலாக பார் கவுன்சிலில் பதிவு செய்பவர்களின் குற்றப்பின்னணி குறித்து போலீசார் மூலம் விசாரிக்கும்போது, ஆசிரியர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும். இதுகுறித்து அரசு ஏன் ஒரு முடிவு எடுக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பினர்.
அரசு விளக்கம்
அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.நீலகண்டன் ஆஜராகி, ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் செய்யும்போது, அதில் குற்ற வழக்கு குறித்து குறிப்பிட வேண்டும். அந்த வழக்கு ஆவணத்தையும் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இருந்தாலும் இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம்'' என்று விளக்கம் அளித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்குகளுக்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
No comments:
Post a Comment