மத்திய அரசின் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? என தேசிய சுகாதார ஆணையம் விளக்கி உள்ளது.
இலவச மருத்துவ காப்பீடு
‘ஆயுஷ்மான் பாரத்’ எனப்படும் ஏழை மக்களுக்கான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
அதாவது, பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் இந்த காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும்.
அறுவை சிகிச்சை போன்ற பெரிய அளவிலான மருத்துவ சிகிச்சைக்கு இந்த காப்பீட்டு திட்டம் பெரும்பாலான ஏழைகளுக்கு உதவியாக இருந்து வருகிறது.
மூத்த குடிமக்களுக்கான திட்டம்
இதற்கிடையே 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனைத்து விதமான சிகிச்சைகளையும் இலவசமாக பெறும் வகையில் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தை கடந்த 29-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஏற்கனவே அமலில் இருந்து வரும் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்துக்கு பொருளாதார அளவுகோல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் இருந்து வரும் நிலையில் மூத்த குடிமக்களுக்கான இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிக்க பொருளாதார அளவுகோல் எதுவும் இல்லை.
தேசிய சுகாதார ஆணையம் விளக்கம்
ஏழை, நடுத்தர, உயர் நடுத்தர அல்லது பணக்காரர் என எந்தவித பாகுபாடும் இன்றி ஆதார் அட்டை அடிப்படையில் 70 வயதை பூர்த்தி செய்த யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணைய முடியும்.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தங்களது பெயரை பதிவு செய்ய மூத்த குடிமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய சுகாதார ஆணையம் விளக்கி உள்ளது. அதாவது, https://beneficiary.nha.gov.in என்ற வலைதளம் மூலமாகவோ அல்லது ‘ஆயுஷ்மான்’ எனப்படும் செயலி மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வீடியோ வெளியீடு
வலைதளம், செல்போன் செயலி மூலம் எப்படி விண்ணப்பிக்கலாம்? என பல்வேறு விளக்கங்களுடன் சுகாதார ஆணையம் தனது வலைதளத்தில் வீடியோவும் வெளியிட்டுள்ளது.
‘ஆயுஷ்மான் பாரத்’ செயலியை பொறுத்தமட்டில் இந்த செயலியை ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ இருந்து பதிவிறக்கம் செய்ததும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற உங்களுக்கு தகுதி உள்ளதா? என பரிசோதிக்கப்படுகிறது.
அதாவது, விண்ணப்பதாரர் 70 வயதுக்கு மேற்பட்டவர் தானா? என ஆதார் அடிப்படையில் உறுதி செய்யப்படுகிறது. விண்ணப்பதாரர் 70 வயதுக்கு மேற்பட்டவராக இல்லையெனில் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற நீங்கள் தகுதியானவர் அல்ல என தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர் 70 வயதுக்கு மேற்பட்டவர் எனில் தகுதியானவர் என்ற அடிப்படையில் சில விவரங்கள் கோரப்படுகிறது.
புகைப்படம்
அதாவது ஆதார் எண், குடும்ப அட்டை எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். மத்திய அரசின் சுகாதார திட்டம், மத்திய ஆயுத போலீஸ் படையினருக்கான ‘ஆயுஷ்மான்’ சி.ஏ.பி.எப்., முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பங்களிப்பு சுகாதார திட்டம் போன்ற சில சுகாதார திட்டங்களை குறிப்பிட்டு இந்த திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் பயன்பெற்று வருகிறீர்களா? என கேள்வி எழுப்பப்படுகிறது. (மேற்கண்ட எந்த திட்டத்திலும் பயன்பெறவில்லை என்றால் மட்டுமே மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற முடியும்)
இதன்பின்பு மீண்டும் ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அவ்வாறு ஆதார் எண்ணை பதிவு செய்ததும் சுய விவரங்கள் தானாக பதிவு செய்யப்படுகிறது. பின்னர், செல்போன் மூலம் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் தொடர்பு முகவரி, செல்போன் எண், குடும்ப உறுப்பினர்களில் வேறு யாரேனும் 70 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இருந்தால் அவர்களது விவரங்களையும் பதிவிட வேண்டும். இவை அனைத்தும் முடிந்ததும் மருத்துவ காப்பீட்டு அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
‘டாப்-அப்’ செய்யப்படும்
வலைதளத்திலும் இதே நடைமுறையை பின்பற்றி காப்பீட்டு அட்டையை பெறலாம்.
ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தில் மூத்த குடிமக்கள் இருக்கும்பட்சத்தில் அவர்கள் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்ற விளக்கத்தையும் சுகாதார ஆணையம் வலைதளத்தில் வீடியோவாக வௌியிட்டு உள்ளது.
‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் 70 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இருந்தால், அவர்களுக்கென தனியாக ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு ‘டாப் அப்’ செய்யப்படும் என்றும், இந்த ‘டாப் அப்’பில் வேறு குடும்ப உறுப்பினர்கள் யாரும் பயன்பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق