நடப்பு கல்வியாண்டில் இருந்து, பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவியல் செய்முறைத்தேர்வும் நடத்தப்படவுள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, ஆசிரியர்கள் வியூகம் வகுத்து பாடம் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, நடத்தி முடிக்கப்படும் பாடங்களில் இருந்து வினாத்தாள் தயாரித்து, மாதந்தோறும் பள்ளி அளவில் அலகு தேர்வு நடத்தி மாணவர்களுக்கு கற்றல் மற்றும் எழுத்து பயிற்சி அளித்து வருகின்றனர்.
அதன் வாயிலாக, பின்தங்கிய மாணவர்களைக் கண்டறிந்து சிறப்பு வகுப்பும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், பொதுத்தேர்வைப் போலவே, அரையாண்டு தேர்வையும் நடத்த பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான பணியில் ஆசிரியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நடப்பாண்டு, முதன்முறையாக, அறிவியல் செய்முறைத்தேர்வும் நடத்தப்படவும் உள்ளது.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வு, டிச., 10ல் துவங்கி 23ல் முடிகிறது. அதன்படி, டிச., 10ல் தமிழ், 11ல் விருப்ப மொழி, 12ல் ஆங்கிலம், 16ல் கணிதம், 19ல் அறிவியல், 23ல் சமூக அறிவியல் தேர்வு நடக்கும்.
கடந்த கல்வியாண்டு வரை, அரையாண்டு தேர்வின் போது, அறிவியல் பாடத்திற்கு செய்முறைத்தேர்வு இடம் பெறவில்லை.
மாறாக, 75 மதிப்பெண்களுக்கு எழுத்துத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு மீதமுள்ள 25 மதிப்பெண்கள், ஆசிரியர்கள் வாயிலாக தோராயமாக அளிக்கப்பட்டு வந்தது.
நடப்பு கல்வியாண்டில் இருந்து, 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுக்கு, அறிவியல் பாடத்திற்கான செய்முறைத்தேர்வு நடத்தப்படும். அதன் வாயிலாக பெறும் மதிப்பெண்களே, மாணவர்களுக்கு அளிக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment