தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பிளஸ்-2 முடித்தவுடன் கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டி மையம் செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்கல்வி வழிகாட்டி குழுவினர் உயர் கல்வி கற்பதன் முக்கியத்துவம் குறித்து மாணவ, மாணவிகள், பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேர்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 108 அரசு மேல்நிலைபள்ளிகள், 4 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் படித்த 11,987 பேர் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 5,012 மாணவர்களும், 6,005 மாணவிகளும் என மொத்தம் 11,017 பேர் இதுவரை கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர். இதன்படி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பிளஸ்-2 படிப்பை முடித்தவர்களில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பிளஸ்-2 படிப்பை முடித்த மாணவ, மாணவிகள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு உயர் படிப்புகளில் சேர்வதற்கு நுழைவு தேர்வுகளை எழுத சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ளது. மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 1,802 மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு மருத்துவ படிப்புகள், வேளாண் படிப்புகள், பொறியியல் படிப்புகள் ஆகியவற்றில் சேர்ந்து உள்ளனர். இதேபோல் கலை அறிவியல் படிப்புகள், நர்சிங், பாரா மெடிக்கல் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகள் என அனைத்து விதமான படிப்புகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது என்று அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment