ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட நிதியை மத்திய அரசு ஒதுக்குவது எப்போது? 32,500 ஆசிரியர்கள், ஊழியர்கள் எதிர்பார்ப்பு - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 8 December 2024

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட நிதியை மத்திய அரசு ஒதுக்குவது எப்போது? 32,500 ஆசிரியர்கள், ஊழியர்கள் எதிர்பார்ப்பு

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட நிதியை மத்திய அரசு ஒதுக்குவது எப்போது? என்பது குறித்து ஆசிரியர்கள், ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கான நவம்பர் மாத சம்பளத்தையும் மாநில அரசு வழங்கிவிட்டது. 
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிதி மத்திய அரசின் ‘சமக்ர சிக்சா அபியான்' என்ற ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.) கீழ் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி சார்ந்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த திட்டத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு 60 சதவீதம் நிதியும், மாநில அரசு 40 சதவீதம் நிதியும் என ஒதுக்கி அதற்கான செலவினங்களை ஈடு செய்து வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.3 ஆயிரத்து 586 கோடி நிதியை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்துக்கு செலவிட மதிப்பிடப்பட்டது. அதன்படி, மத்திய அரசு இதற்காக ரூ.2 ஆயிரத்து 152 கோடியை தர வேண்டும். இந்த தொகை 4 தவணைகளாக பிரித்து வழங்கப்படும். அதில் முதல் தவணையான ரூ.573 கோடி கடந்த ஜூன் மாதத்தில் வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் 2-வது தவணைக்கான காலஅவகாசமும் கடந்த செப்டம்பர் மாதம் கடந்துவிட்ட நிலையிலும் இதுவரை ஒரு பைசா நிதிகூட ஒதுக்கப்படவில்லை. 
நவம்பர் மாத சம்பளம் தொடர்ந்து நிதி ஒதுக்கப்படாமல் இருந்ததால், இந்த திட்டத்தின்கீழ் பணியாற்றி வரும் 15 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 32 ஆயிரத்து 500 பேருக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி, கலைத்திருவிழா உள்ளிட்ட பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்கள், பணிகள் முடங்கிப்போகும் சூழலும் நிலவியது. மத்திய அரசு நிதியை ஒதுக்காவிட்டாலும், தன் சொந்த நிதியை கொண்டு கடந்த செப்டம்பர் மாதம் வரை மாநில அரசு சமாளித்தது. அதன் பிறகும் மத்திய அரசு நிதி ஒதுக்காத நிலையை தொடர்ந்து, ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் வழங்குவது? என பள்ளிக்கல்வித்துறை திண்டாடியது. இருப்பினும் மாநில அரசு கைக்கொடுத்து, கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதத்துக்கான சம்பளத்தை வழங்கியது. அதன் தொடர்ச்சியாக 32 ஆயிரத்து 500 ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நவம்பர் மாதத்துக்கான சம்பளத்தையும் தற்போது வழங்கியுள்ளது. மேலும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின்கீழ் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
ஆசிரியர்கள், ஊழியர்கள் எதிர்பார்ப்பு இன்னும் எத்தனை மாதங்களுக்கு மாநில அரசு இப்படி வழங்கும், அந்த திட்டங்களை செயல்படுத்தும் என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கிறது. மற்றொரு பக்கம் மத்திய அரசிடம், இதற்கான நிதியை ஒதுக்கக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தும், அதற்கான பதில் இதுவரை இல்லாததும் அந்த திட்டத்தின் கீழ் ஊதியம் பெற்று வரும் ஆசிரியர்கள், ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நேற்று முன்தினம் கூட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம், ‘இதுவரை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை' என்றுதான் கூறியிருந்தார். மத்திய அரசின் பி.எம். ஸ்ரீ பள்ளித்திட்டத்தில் இணையாததற்காக, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதி நிறுத்தப்பட்டு இருப்பதாக சொல்லப்படும் சூழலில், அதுபற்றி மாநில அரசிடம் மத்திய அரசு பேச வேண்டும் என்றும், அந்த காரணத்துக்காக நிதியை நிறுத்திவைக்காமல் உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.

No comments:

Post a Comment