சத்துணவு திட்டத்தின் கீழ் 9 ஆயிரம் சமையல் உதவியாளர் பணியிடங்களை, தொகுப்பூதியம்
அடிப்படையில் நிரப்பிட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
சத்துணவு திட்டம்
சமூக நலத்துறை கமிஷனர் கடந்த ஜூலை மாதம் 10-ந் தேதி தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை
எழுதினார். அந்த கடிதத்தில், ‘தமிழகத்தில் மொத்தமுள்ள 43 ஆயிரத்து 131 சத்துணவு
மையங்களில், ஒரு சத்துணவு மையத்துக்கு ஒரு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல்
உதவியாளர் என 3 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு உள்ளது. அதில், சத்துணவு சமையல்
உதவியாளருக்கு சிறப்பு கால முறை ஊதியமாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரையில்
வழங்கப்படுகிறது. சத்துணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட, தற்போது காலியாக உள்ள
மொத்த பணியிடங்களில், அவசர அவசியம் கருதி, 8 ஆயிரத்து 997 சமையல் உதவியாளர்
பணியிடங்களை மட்டும் மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட
ஆணை பிறப்பிக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.
9 ஆயிரம் பணியிடம்
சமூக நலத்துறை கமிஷனரின் இந்த பரிந்துரையை, தமிழக அரசு பரிசீலனை செய்தது. அதன்படி,
சத்துணவு திட்டத்தில் 8 ஆயிரத்து 997 சமையல் உதவியாளர்கள் பணியிடங்களை
நிரப்புவதற்கு அனுமதி அளித்தும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு
அரசாணை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை
செயலாளர் ஜெயஸ்ரீமுரளீதரன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் தொய்வின்றி செயல்பட, இந்த திட்டத்தில் காலியாக
உள்ள பணியிடங்களில், 8 ஆயிரத்து 997 சமையல் உதவியாளர் பணியிடங்களை மட்டும் ரூ.3
ஆயிரம் தொகுப்பூதியம் அடிப்படையில் நியமனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும்,
4 மாதங்களுக்கான தொகை ரூ.10 கோடியே 79 லட்சத்து 64 ஆயிரம் நிதி ஒப்புதல் செய்து ஆணை
வெளியிடப்படுகிறது. தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளர்களில், 12
மாதங்கள் திருப்திகரமாக பணியை முடிக்கும் தகுதியான பணியாளர்களுக்கு, சிறப்பு கால
முறை ஊதியம் வழங்கப்படும். சமையல் உதவியாளர் பணி நியமனத்துக்கு குறைந்த பட்ச
கல்வித்தகுதியாக, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியும், தோல்வியும் நிர்ணயம்
செய்யப்படுகிறது. சென்னை மாவட்டத்தில் சமையல் உதவியாளர்களை தொகுப்பூதியத்தில்
நியமனம் செய்திட சமூகநலத்துறை இணை இயக்குனர் (சத்துணவு திட்டம்) நியமன அலுவலகராக
நியமனம் செய்யப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق