வருமான உச்ச வரம்பு
இதுகுறித்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன்
வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- சமூக நலத் துறையின் கீழ்
செயல்படுத்தப்பட்டு வரும், அனைத்து திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் நிதியுதவி
பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.12 ஆயிரம் என நிர்ணயம் செய்து
1993-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த வருமான உச்சவரம்பு 2008-ம் ஆண்டு
ரூ.24 ஆயிரம் என உயர்த்தப்பட்டது. மேலும், அரசு சேவை இல்லங்களில் உள்ளுறைவோர்களின்
சேர்க்கை, அரசு இடைநிலை ஆசிரியைப் பயிற்சிக்கான மாணவியர் சேர்க்கை, சத்தியவாணி
முத்து அம்மையார் நினைவு தையல் எந்திரம் வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு
குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தி
2016-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
இந்த நிலையில் சட்டசபையில், சமூக நலன் மகளிர் உரிமை அமைச்சர், சமூக நலத் துறையின்
மூலம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களில்
பயன் பெறுவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகளில் ஒன்றான குடும்ப ஆண்டு வருமான
உச்சவரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்படும் என்று கடந்த
ஜூன் மாதம் அறிவித்தார். இதுதொடர்பாக அரசுக்கு சமூக நல ஆணையர் கடிதம்
எழுதியுள்ளார். கூடுதல் பெண்கள், பெண் குழந்தைகள், மாணவிகள் பயனடையும் வகையில்
அவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களான முதல்-அமைச்சரின் பெண்
குழந்தை பாதுகாப்பு திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண
நிதி உதவித் திட்டம், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம்
வழங்கும் திட்டம், அரசு சேவை இல்லங்களில் உள்ளுறைவோர் சேர்க்கை மற்றும் தொழில்
கூட்டுறவு சங்கங்களில் அங்கத்தினர் மற்றும் இணை உறுப்பினர் அனுமதி, தையல்
பயிற்சிக்கான சேர்க்கை போன்ற சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும்
திட்டங்களுக்கான குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்தி ஆணை
வழங்க வேண்டும் என்று அரசுக்கு சமூக நல ஆணையர் கோரிக்கை வைத்துள்ளார்.
உச்ச வரம்பு உயர்வு
சமூக நல ஆணையரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலித்து அதை ஏற்றுக்கொள்கிறது.
அதன்படி, பெண் குழந்தைகள், பெண்கள் நலத்திட்டங்களுக்கான குடும்ப ஆண்டு வருமான உச்ச
வரம்பை ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தி அரசாணை
வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق