2024-ம் ஆண்டில் எவ்வளவு பணியிடங்கள் நிரப்பப்பட்டன? டி.என்.பி.எஸ்.சி. தகவல் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 1 January 2025

2024-ம் ஆண்டில் எவ்வளவு பணியிடங்கள் நிரப்பப்பட்டன? டி.என்.பி.எஸ்.சி. தகவல்

2024-ம் ஆண்டில் 30 வகையான தேர்வுகள் மூலம் 10,701 தேர்வர்கள் அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. 

10,701 தேர்வர்கள் 

அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் 2024-ம் ஆண்டில் எவ்வளவு பணியிடங்கள் நிரப்பப்பட்டன? என்பது தொடர்பான விவரங்களை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- 

2024-ம் ஆண்டில் திருத்திய தேர்வுகளின் ஆண்டுத் திட்டத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட தேதியில் அல்லது அதற்கு முன்பே அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டன. அந்த வகையில் மதிப்பீட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, குரூப்-1, 2, 2ஏ, 4 பணிகளின் தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டுகளைவிட 2024-ம் ஆண்டில் விரைவாக வெளியிடப்பட்டன. மொத்தம் 30 வகையான தேர்வுகள் மூலம் 2024-ம் ஆண்டில் 10,701 தேர்வர்கள் பல்வேறு அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
தேர்வு ஆண்டுத்திட்டம் 

தேர்வர்களின் நலன் கருதி, குரூப்-2ஏ பணிகளின் முதன்மைத் தேர்வுக்கான தேர்வுத் திட்டம் கொள்குறிவகையாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. குரூப்-2 பணிகள் மற்றும் தொழில்நுட்ப தேர்வுகளில் சம்பள ஏற்ற முறை 17 முதல் 20 வரை உள்ள பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. குரூப்-1 ஏ, 6 பணிகளுக்கான தேர்வுத் திட்டம், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடத்தும் முறைகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதமாக 1,49,971 தேர்வர்கள் விண்ணப்பித்த ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுகளில் 103 பாடத்தாள்களுக்கான தேர்வுகள் கணினி வாயிலாக நடத்தப்பட்டன. 2025-ம் ஆண்டுக்கான தேர்வுகளின் ஆண்டுத்திட்டம், 2024 டிசம்பர் மாதங்களுக்கு பதிலாக 2 மாதங்களுக்கு முன்னதாக அதாவது அக்டோபரில் வெளியிடப்பட்டது. அந்தவகையில் 14,353 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment