பள்ளிக்கல்வித்துறையின் கலைத் திருவிழா போட்டி: 466 மாணவர்களுக்கு ‘கலையரசன், கலையரசி’ விருது - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 25 January 2025

பள்ளிக்கல்வித்துறையின் கலைத் திருவிழா போட்டி: 466 மாணவர்களுக்கு ‘கலையரசன், கலையரசி’ விருது

பள்ளிக்கல்வித்துறையின் கலைத் திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவித்தபோது எடுத்தபடம். அருகில், அமைச்சர்கள், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேயர் பிரியா ஆகியோர் உள்ளனர். 

 பள்ளிக் கல்வித்துறையின் கலைத் திருவிழா போட்டியில், மாநில அளவில் வெற்றி பெற்ற 466 மாணவ, மாணவிகளுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார். 

 கலைத்திருவிழா 

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-25-ம் கல்வியாண்டு, ‘சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு' என்ற கருப்பொருளுடன் கலைத் திருவிழா நடத்தப்பட்டது. இதில், மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 466 மாணவ, மாணவிகளுக்கு, 'கலையரசன், கலையரசி' விருது, பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாக அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகளின் கரகாட்டம், மயிலாட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான நாடகம் ஆகியவற்றை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டு ரசித்தார். பிறகு, கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி விருதுகளை, துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். 

கலை அரசர்கள் 

தொடர்ந்து, நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- ‘சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு' என்ற கருப்பொருளுடன் சிறந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சி நடத்திய அனைவருக்கும் பாராட்டுகள். பெரியவர்கள்தான் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்குவார்கள். ஆனால், இன்று குழந்தைகள் எங்களுக்கு தவிர்க்க முடியாத, காலத்திற்கு ஏற்ப சிறந்த அறிவுரை வழங்கி உள்ளார்கள். தமிழக மாணவர்கள் எப்போதுமே அதி சிறப்பு வாய்ந்தவர்கள். பிற மாநில குழந்தைகள், ஏதாவது ஒரு விஷயத்தில் சிறப்பானவர்களாக இருப்பார்கள். ஆனால், தமிழக மாணவர்கள் படிப்பு, விளையாட்டு மற்றும் பிற கலைகளிலும் சிறப்பானவர்களாக திகழ்கின்றனர். 
இந்திய அளவில் தமிழக மாணவர்கள் கலையிலும் அரசர்கள் என்பதை நிரூபித்துள்ளார்கள். நீங்கள் எதிர்காலத்தில் உங்களின் துறையில் சாதிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேயர் பிரியா, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி, தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குனர் சங்கர், மாவட்ட கலெக்டர் ராஸ்மி சித்தார்த் ஜகடே, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உள்பட அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். டெல்லிக்கு கேட்கிறதா? கலை திருவிழா மேடையில், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த மாணவர்களின் நாடகத்தின்போது, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கேட்குதா? கேட்குதா? என மாணவர்கள் கூறினர். 
இதை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தன்னுடைய பேச்சில் மேற்கொள் காண்பித்து பேசுகையில், ‘மாணவர்கள் சுற்றுச்சூழல் தொடர்பாக கேட்குதா, கேட்குதா என கூறிக் கொண்டே இருந்தனர். அந்த குழந்தைகளில் 10 பேரையாவது டெல்லிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அங்கு சென்று மத்திய அரசின் முன்பு சென்று கேட்குதா? எங்களுக்கு தரவேண்டிய ரூ.2 ஆயிரத்து 151 கோடியை நீங்கள் தர வேண்டுமே கேட்குதா? என கேட்க வேண்டும் என தோன்றுகிறது' என்றார். இதற்கு, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘அமைச்சர், நிச்சயம், அதை செய்யவேண்டும். மாணவர்களின் குரல் டெல்லியில் கேட்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார்.

No comments:

Post a Comment