நாளை நடைபெற இருந்த யு.ஜி.சி. நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
யு.ஜி.சி. நெட் தேர்வு
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்
பணிக்கான தகுதித் தேர்வாகவும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கான தகுதித்
தேர்வாகவும், பி.எச்டி படிப்புக்கான தகுதித் தேர்வாகவும் ‘யு.ஜி.சி. நெட்' தகுதித்
தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வானது, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர்
மாதங்களில் நடத்தப்படும். அந்த வகையில் டிசம்பர் மாதத்துக்கான யு.ஜி.சி நெட் தேர்வு
2025-ம் ஆண்டு ஜனவரி 3-ந்தேதி தொடங்கி ஜனவரி 16-ந்தேதி வரையில் நடைபெறும் என
அறிவிக்கப்பட்டு, தேர்வு நடைபெற்று வருகிறது.
மு.க.ஸ்டாலின் கடிதம்
ஆனால் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால், அதற்கான விடுமுறை நாட்களில்
தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின், மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு கடிதம்
எழுதினார் அதில் யு.ஜி.சி. நெட் தேர்வு மற்றும் பிற தேர்வுகளை ஜனவரி 13-ந்தேதி
முதல் 16-ந்தேதி வரை நடத்துவது தவிர்த்து வேறு நாட்களில் மாற்றியமைக்க வேண்டும்' என
வலியுறுத்தி இருந்தார். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த தேர்வை
ஒத்திவைக்க கோரிக்கை வைத்தனர்.
தேர்வு ஒத்திவைப்பு
இதைத்தொடர்ந்து நாளை (புதன்கிழமை) நடைபெற இருந்த யு.ஜி.சி நெட் தேர்வு
ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து முகமை
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- யு.ஜி.சி. நெட் தேர்வுகள் ஜனவரி
3-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பொங்கல்
பண்டிகை, மகர சங்கராந்தி மற்றும் இன்னும் பிற விழாக்கள் காரணமாக, யு.ஜி.சி. நெட்
தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வு முகமைக்கு கோரிக்கைகள் வந்தன. எனவே
தேர்வர்களின் நலன் கருதி, நாளை (புதன்கிழமை) நடைபெற இருந்த யு.ஜி.சி. நெட் தேர்வு
ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். நாளை
மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறும் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment