நன்றி: தினத்தந்தி 18/01/2025
‘கல்வி சிறந்த தமிழ்நாடு’ என்று மகாகவி பாரதியார் அன்றே பாடியிருக்கிறார்.
தமிழர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தார்கள் என்பது சங்ககால
இலக்கியங்களில் இருந்தே தெரிகிறது.
சுதந்திரம் அடைந்த பிறகு பெருந்தலைவர் காமராஜர்
அனைவரும் பள்ளிக்கூடத்துக்கு செல்ல வேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டிருந்தார்.
‘பள்ளிக்கூடமே இல்லாத ஊரே இருக்கக்கூடாது, வீட்டில் பள்ளிக்கூடத்துக்கு செல்லாத
குழந்தைகளே இருக்கக்கூடாது’ என்பதையே லட்சியமாகக் கொண்டிருந்தார். அந்த வழியில்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பல திட்டங்களை தொடர்ந்து கல்வி வளர்ச்சிக்காக
நிறைவேற்றி வருகிறார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும்,
பள்ளிக்கூடத்துக்கு செல்வது என்பது மாணவர்களுக்கு கசப்பாக இல்லாமல் கற்கண்டு
சாப்பிடுவது போல இனிப்பாக இருக்கவேண்டும் என்ற வகையில், பள்ளிக்கூடங்களில்
கற்பித்தலும், கற்றுக்கொள்ளுதலும் இருக்கவேண்டும் என்பதற்கேற்ப கல்வித்திட்டங்களை
வகுத்து வருகிறார்.
பொதுவாக, தங்கள் குழந்தைகள் அனைவரையும் ஆரம்ப பள்ளிகளில்
பெற்றோர் சேர்த்து விடுகிறார்கள். ஆனால், சில வகுப்புகளுக்கு முன்னேறிச் சென்ற
பிறகு, குடும்ப வறுமை, படிப்பில் நாட்டம் இல்லாமை போன்ற காரணத்தால் மாணவர்கள்
பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல் படிப்பை நிறுத்தி விடுகிறார்கள். இதை தடுப்பதற்காக,
யாராவது மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு வரவில்லையென்றால், அந்த வகுப்பு ஆசிரியர்
அவர்கள் வீட்டுக்கே சென்று, ஏன் பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை? என்பதை அறிந்து,
அதற்கு தீர்வும் கண்டு, மீண்டும் பள்ளிக்கூடத்து வரவைக்கவேண்டும் என்று கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
இந்த முயற்சிக்கு இப்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது. மாணவர்கள்
இப்போதெல்லாம் இடைநிற்றல் இல்லாமல் படித்து பெரும் சாதனையை படைத்துள்ளனர். மத்திய
அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை நாடு முழுவதும் இடைநிற்றல்
இல்லாமல் மாணவர்கள் படிப்பது குறித்து ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. இதில், தமிழ்நாடு
முன்னணியில் இருக்கிறது. 8-வது வகுப்பு வரை இடைநிற்றல் இல்லாமல் படிக்கும்
மாணவர்கள் கணக்கில் 2019-ல் 100-க்கு 99 மாணவர்களும், 97.5 மாணவிகளும்
இடம்பெற்றிருந்தார்கள். ஆனால், இப்போது 2024-ல் 100-க்கு 100 மாணவ - மாணவிகள்
இடைநிற்றல் இல்லாமல் 8-வது வகுப்பு வரை தங்கள் கல்வியை தொடர்ந்து இருக்கிறார்கள்.
இந்த பட்டியலில் தேசிய அளவில் தமிழ்நாடு, மாணவர்கள் வரிசையில் 4-வது இடத்திலும்,
மாணவிகள் வரிசையில் 7-வது இடத்திலும் இருந்தது. ஆனால், 2024-ல் மாணவர்கள், மாணவிகள்
இருபாலர்களிலும் தமிழ்நாடு முதல் இடம் பெற்று நாட்டிலேயே முதன்மை மாநிலமாக
திகழ்ந்து முத்திரை பதித்துள்ளது.
உயர்நிலை கல்வியிலும் தமிழ்நாடு 2019-ல்
மாணவர்கள் 81.3 சதவீதமும், மாணவிகள் 89.4 சதவீதமும் தங்கள் படிப்பை தொடர்ந்து
இருந்தார்கள். ஆனால், 2024-ல் மாணவர்கள் 89.2 சதவீதமும், மாணவிகள் 95.6 சதவீதமும்
தங்கள் படிப்பை உயர்நிலைப்பள்ளிக் கூடங்களில் தொடர்ந்து நல்ல முன்னேற்றத்தை
அடைந்திருக்கிறார்கள். இதிலும் அகில இந்திய தரவரிசையில் மாணவர்கள் 2019-ல் 8-வது
இடத்திலும் மாணவிகள் 4-வது இடத்திலும் இருந்தனர். இப்போது மாணவர்கள் 4-வது
இடத்துக்கும், மாணவிகள் 2-வது இடத்துக்கும் வந்துவிட்டனர். இதில் மாணவிகளின்
முன்னேற்றம் அளப்பரியதாக உள்ளது. நடுநிலைப்பள்ளியில் இடைநிற்றல் இல்லாமல்100
சதவீதம் இருப்பதுபோல, உயர்நிலைக் கல்வியிலும் 100 சதவீத இலக்கினை எட்டவேண்டும்
என்பதே பள்ளிக்கல்வித்துறையின் எண்ணமாக இருக்கிறது.
ليست هناك تعليقات:
إرسال تعليق