எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு: 25½ லட்சம் மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள் பள்ளிக்கல்வித்துறை தகவல் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 14 February 2025

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு: 25½ லட்சம் மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள் பள்ளிக்கல்வித்துறை தகவல்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை 25 லட்சத்து 57 ஆயிரத்து 354 மாணவ-மாணவிகள் எழுத இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 


25½ லட்சம் பேர் எழுதுகிறார்கள் 

 பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. அதேபோல், பிளஸ்-1 வகுப்புக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி ஆரம்பித்து 27-ந்தேதி வரையிலும், எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு அடுத்த மாதம் 28-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை 12 லட்சத்து 14 ஆயிரத்து 379 பள்ளி மாணவர்கள், 12 லட்சத்து 93 ஆயிரத்து 434 பள்ளி மாணவிகள், 48 ஆயிரத்து 987 தனித்தேர்வர்கள், 554 சிறைவாசிகள் என மொத்தம் 25 லட்சத்து 57 ஆயிரத்து 354 பேர் எழுதுகிறார்கள். 

ஆலோசனைக் கூட்டம் 

 இந்த நிலையில் பொதுத்தேர்வு தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாக அரங்கில் நேற்று நடத்தினார். 

இதில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் பொ.சங்கர், பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், அரசு தேர்வுத்துறை இயக்குனர் லதா, தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ், தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

 தரவுகள் 

ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:- பொதுத்தேர்வு என்பது பொதுத் தேர்தலை நடத்துவதற்கு சமமான ஒன்று. பல லட்சம் மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது இது. இந்தியாவில் பொதுத்தேர்வை நடத்தும் பெருமை வாய்ந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகள் பதற்றத்தோடு வராமல் மகிழ்ச்சியான மனநிலையில் வரவேண்டும். தேர்வுக்கு முந்தைய நாள் படிக்காதீர்கள். முன்கூட்டியே தயாராகி தேர்வில் வெற்றி பெறுங்கள். 

நம்முடைய மாணவர்களின் கல்விநிலை குறித்து வெளியிடப்படும் தரவுகளை இஷ்டத்துக்கு யார் வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போய்விடலாம். இதற்கு தீர்வாக நம்முடைய 10 லட்சம் மாணவ-மாணவிகளிடம் நாமே ஆய்வு செய்து தரவுகளை வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம். மாநில திட்டக்குழு இந்த அறிக்கையை வெளியிடும். அப்போது நம்முடைய மாணவர்களின் நிலை தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment