2025-2026ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை 01.03.2025 முதல் தொடங்குதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 18 February 2025

2025-2026ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை 01.03.2025 முதல் தொடங்குதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பொருள்: 

தொடக்கக் கல்வி -2025-2026ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை - 01.03.2025 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குதல் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளில் 5+ வயதினை நிறைவு செய்யும் குழந்தைகளை அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கை செய்தல் சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக 


பார்வையில் காணும் அரசாணையில் 5 வயது பூர்த்தி அடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகளை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 முதல் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை செய்வதற்கு வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆணைகள் வெளியிடப்பட்டது. இவ்வரசாணையில் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கவனமுடன் பின்பற்றி 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை ஒவ்வொரு பள்ளியிலும் 01.03.2025 முதல் தொடங்கிட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக பின்வரும் விவரங்களையும் கவனத்தில் கொள்ள சார்நிலை அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

தமிழ்நாட்டில் பெரும்பான்மையான அரசுப் பள்ளிகள் ஊரகப் பகுதிகளில் தான் அமைந்துள்ளன. ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் 3 முதல் 5 வயதுடைய குழந்தைகள் பள்ளி முன்பருவக் கல்வியைக் கற்று வருகின்றனர். இம்மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5+ வயதுடைய குழந்தைகளை அந்தந்தக் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் (Habitation and Catchment 1Area) சேர்க்கை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மேற்கொள்ள வேண்டும். மேற்படி, அங்கன்வாடி மையங்களில் கல்வி பயிலும் 5+ வயதுடைய அனைத்து குழந்தைகளையும் முழுமையாக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கை செய்வதற்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மற்றும் சுயஆர்வலர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கி மாணவர் சேர்க்கைப் பணிகளை சிறந்த முறையில் நடத்திட வேண்டும். 

மேலும் அங்கன்வாடி மையங்கள் அல்லாது வேறு பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு சேர்க்கை ஆக விரும்பும் குழந்தைகள் மற்றும் ஒன்றாம் வகுப்பு அல்லாத பிற வகுப்புகளுக்கு சேர்க்கை ஆக விரும்பும் மாணவர்களுக்கு அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கைக்கான இடங்களை பள்ளிகள் வழங்க உரிய அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரம் உயரும் பொருட்டு பல்வேறு முன்னோடித் திட்டங்கள் பள்ளிக் கல்வித் துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் திறன் வகுப்பறைகள் (Smart Class Rooms), அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் (HI-Tech Labs) அதற்குத் தேவையான இணையதள (Broadband Connectivity) வசதியுடன் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினியும் (TAB) வழங்கப்பட்டு உள்ளது.அரசுப் பள்ளிகளில் கிடைக்கும் இத்தகைய கற்றல் வாய்ப்புகள், பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு உதவித் தொகைகள் குறித்த விழிப்புணர்வினை அனைத்து பொது மக்கள் மற்றும் அனைத்து பள்ளி வயது குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்திடத் தேவையான நடவடிக்கைகளை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் மேற்கொள்வதற்கு உரிய அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக வழங்கிடவும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மாவட்டஆட்சியரின் ஆலோசனையின்படியும் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மாவட்டத் திட்ட அலுவலருடன் ஒன்றிணைந்து செயல்பட்டு அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர் கூட விடுபடாமல் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை செய்திடவும், 2025-26ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தினை கணிசமான அளவில் உயர்த்திடவும் சார்நிலை அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை ஆகும் மாணவர் விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். 

இணைப்பு : அரசாணை நகல்





No comments:

Post a Comment