நடப்பு கல்வியாண்டு முடிவதற்குள் அரசு, தனியார் பள்ளிகளில் ‘சூடுபிடிக்கும்' மாணவர்
சேர்க்கை
நடப்பு கல்வியாண்டு முடிவதற்கு முன்னதாகவே அரசு, தனியார் பள்ளிகளில்
அடுத்த கல்வியாண்டுக்கான (2025-26) மாணவர் சேர்க்கை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தனியார் பள்ளிகளில் பணத்தைக் கட்டிவிட்டு சீட்டுக்காக பெற்றோர் காத்திருக்கின்றனர்.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நம்மிடம் இருந்து பறிக்க முடியாத ஒரே சொத்து கல்வி.
அந்த கல்வியை பிள்ளைகளுக்கு எப்படியாவது கொடுத்துவிட வேண்டும் என பெற்றோரும் கடனை
வாங்கி படிக்க வைக்கின்றனர். அரசு பள்ளிகளில் படிக்க வைக்க கட்டணம் இல்லை
என்றாலும், தனியார் பள்ளிகளில் சேருவதற்கான கட்டணத்தை கேட்டால் நெஞ்சடைக்கும்.
இருப்பினும் அரசு பள்ளிகளைவிட தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்குதான் கடும் போட்டி
தொடர்ந்து இருக்கிறது. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக அரசு
பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அடுத்த
கல்வியாண்டுக்கான (2025-26) மாணவர் சேர்க்கை சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அதிலும்
தனியார் பள்ளிகளில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே மாணவர் சேர்க்கை பணிகள்
தொடங்கி இருக்கின்றன. பணம் கட்டி சீட்டுக்கு காத்திருப்பு முன்பெல்லாம், தனியார்
பள்ளிகளில் சேருவதற்கு விண்ணப்பப் படிவம் வாங்க அந்த பள்ளி முன்பு நீண்ட வரிசையில்
காத்திருப்பார்கள்.
அதுவும் பிரபலமான பள்ளிகளில் சேருவதற்கு இரவோடு இரவாக சென்று
பள்ளி முன்பு படுத்துறங்கி காலையில் விண்ணப்பப் படிவம் வாங்கிய சம்பவங்களும்
நடந்தன. ஆனால் இப்போதெல்லாம் ஆன்லைனில் முடிந்துவிடுவதால், அந்த நிலை இப்போது
இல்லை. ஆன்லைனில் விண்ணப்பித்து அதற்கான நுழைவுத் தேர்வு எழுதி தகுதியானவர்களை
பள்ளிகளில் சேர்க்கின்றனர். அப்படி தேர்ச்சி பெற்றாலும் அதிகம் பேர் பட்டியலில்
வந்தால், காத்திருப்பு பட்டியல் அறிவிக்கப்பட்டு, அதற்காக பணத்தை கட்டி சீட்டுக்காக
பெற்றோர் காத்திருக்கும் நிலையையும், தேர்ச்சி பெற முடியாமல் போனவர்கள் அந்த
பள்ளிகளில் தங்களுடைய பிள்ளைகளை எப்படியாவது சேர்த்துவிடவேண்டும் என்ற நோக்கில்
சிபாரிசுக்காக ஏங்கி தவிக்கும் நிலையையும் பல இடங்களில் பார்க்க முடிகிறது.
அரசு
பள்ளிகள்... சில பள்ளிகளில் ஆன்லைனிலோ அல்லது நேரிலோ விண்ணப்பித்து நேரடியாக சேரும்
வழக்கம் உள்ளது. சில பள்ளிகள் செயற்கையாக இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டதாக
சுட்டிக்காட்டி சீட்டுக்காக அலைய விடுவதாகவும் பெற்றோர் சிலர்
குற்றஞ்சாட்டுகின்றனர். நல்ல உயர்தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்
பெற்றோரும் வேறு வழியில்லாமல் பணத்தை வாரி இறைக்கின்றனர். அரசு பள்ளிகளை
பொறுத்தவரையில், அது வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்று
பள்ளிக்கல்வித்துறை சொல்லி வருவதற்கு ஏற்றாற்போல், அரசு பள்ளிகளிலும் மாணவர்
சேர்க்கை படுஜோராக நடக்கிறது. எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்
சேர்க்கை தற்போது அரசு பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் கல்வியாண்டு
தொடங்குவதற்கு முன்னதாகவே அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சூடுபிடிக்கத்
தொடங்கியிருக்கிறது.
No comments:
Post a Comment