மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவு தேர்வு மே 4-ந்தேதி நடக்கிறது அடுத்த மாதம்
7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
நாடு முழுவதும் உள்ள
மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான
மாணவர் சேர்க்கையும், மற்றும் இயற்கை மருத்துவப்படிப்புகளான சித்தா,
ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கையும் ‘நீட்'
நுழைவுத் தேர்வுகள் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல,
கால்நடை மருத்துவப்படிப்புகளான பி.வி.எஸ்சி. மற்றும் ஏ.எச் படிப்புக்கான
அகில இந்திய ஒதுக்கீடு சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்
நடத்தப்படுகிறது.
இந்த தேர்வை, தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது. இந்த
நிலையில், 2025-26-ம் கல்வியாண்டுக்கான மருத்துவப்படிப்பு மாணவர்
சேர்க்கை நீட் நுழைவுத் தேர்வு வருகிற மே மாதம் 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)
நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது. மாணவர்கள்,
https://neet.nta.nic.in, https://www.nta.ac.in/ ஆகிய இணையதளம் வழியே
விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (மார்ச்)
7-ந்தேதி நள்ளிரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள மார்ச் 9-ந்தேதி முதல்
11-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. நீட் தேர்வுக்கான கட்டணமாக
பொதுப்பிரிவுக்கு ரூ.1700-ம், பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.1,600-ம்,
எஸ்சி/எஸ்டி பிரிவுக்கு ரூ.1,000-ம் என்றளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி மற்றும் சேவைக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் என தேசிய
தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்
மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் ஏப்ரல் மாதம் 26-ந்தேதி
வெளியிடப்படும். 2025-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் வருகிற ஜூன்
மாதம் 14-ந்தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment