ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளின்படி மனை பிரிவுக்கு அனுமதி வழங்க எளிய வழிமுறைகள் 


தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சிமற்றும் கட்டிட விதிகள்படி மனைபிரிவுகளுக்கான அனுமதி வழங்குவதை எளிமைப்படுத்துவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வீட்டு வசதித் துறை செயலர் டி.கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணை: தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளைவெளியிட்டது. 

இதில், மனை பிரிவுகள், உட்பிரிவுகள் இவற்றுக்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில், மனை பிரிவுகளில் சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடம் தவிர, 10 சதவீதம் இடம் பொழுதுபோக்கும் இடத்துக்காக ஒதுக்கப்பட்டு அந்த இடத்தை உள்ளாட்சி அமைப்புக்கு இலவசமாக வழங்க வேண்டும். இதுதவிர கூடுதலாக மொத்த பரப்பில் ஒரு சதவீத பகுதி பொது பயன்பாட்டுக்காகவும், 0.5 சதவீத பகுதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கும் வழங்க வேண்டும். 

 இந்நிலையில், மனை பிரிவுக்கான அனுமதி பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்று கிரெடய் அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதுதவிர, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலரும் இதுதொடர்பாக உரிய அறிவுறுத்தல்களை வழங்க அரசுக்கு பரிந்துரைத்தார். நகர ஊரமைப்புத் துறை (டிடிசிபி) இயக்குநரும் அரசுக்கு சில பரிந் துரைகளை அளித்தார். இவற்றை பரிசீலித்த தமிழக அரசு, மனை பிரிவுகள் அங்கீகாரம் வழங்குவதை எளிமைப்படுத்த சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள்படி அனுமதி கோரும் மனைபிரிவை, சிஎம்டிஏ அல்லது டிடிசிபி அதிகாரிகள் பார்வையிட்டு, சாலை, திறந்தவெளிப் பகுதி, பொதுமக்கள் உபயோகத்துக்கான இடங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். 

 திட்ட அனுமதி, மனை பிரிவு வரைபடம் ஆகியவற்றுடன் தானம்வழங்கப்பட்டதற்கான அசல் ஆவணம் ஆகியவை உள்ளாட்சி அமைப்புக்கு வழங்கப்பட வேண்டும். சென்னை பெருநகர மாநகராட்சி பகுதியாக இருந்தால், திட்ட அனுமதி, மனை பிரிவு அனுமதி மற்றும் அசல் ஆவணம் ஆகியவற்றுக்கு கவுன்சிலின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதன்பின் தானமாக வழங்கப்பட்ட இடங்களைக் கையகப்படுத்த வேண்டும். இதர உள்ளாட்சி அமைப்புகளிலும் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் ஒப்புதல் பெறப்பட வேண்டும். 

 சென்னை மாநகராட்சி பகுதியில், சாலைகள், மழைநீர் கால்வாய்கள், சாலை விளக்குகள் ஆகியவற்றுக்கான உரிய கட்டணத்தை விண்ணப்பதாரர்களிடம் இருந்து மாநகராட்சி நிர்வாகம் பெற வேண்டும். அதேபோல், இதர நகர்ப்புறஉள்ளாட்சிகளிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். கட்டணத்தைப் பெற்றபின், இறுதியான மனை பிரிவு வரைபடம்,திட்ட குழுமத்தின் அனுமதி, உள்ளாட்சியின் அனுமதி ஆகியவற்றை விண்ணப்பதாரருக்கு நேரடியாக அளிக்க வேண்டும். 

சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறைக்கு உட்பட்ட இதர நகர்ப்புற உள்ளாட்சிகள் தவிர, இதர பகுதிகளில் உரியகட்டணங்களை பெற்ற பின், தார்சாலைகள் அமைப்பு, மழைநீர் கால்வாய், குடிநீர் வசதிகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், சாலை விளக்குகள் போன்றவை அமைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதியை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!