கிறிஸ்துமஸ் விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் சொன்ன குட்டிக் கதை 


விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறிய குட்டிக்கதை வருமாறு:- 

சாலையோரமாக இருந்த மரத்தடி நிழலில் சிறுவன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவனுடைய கையில் அப்போதுதான் மேலிருந்து கீழே தவறி விழுந்து, சிறகு முறிந்துபோன ஒரு பறவை இருந்தது. சிறுவன் தன் கையிலிருந்த அந்த பறவையை வாஞ்சையோடு தடவி கொண்டிருந்தான். 

சிறிது நேரம் கழித்து அந்த வழியாக பெண்மணி ஒருவர் வந்தார். சிறுவனின் அருகே சென்ற அந்த பெண் தம்பி! உன் கையிலிருக்கும் இந்த பறவையை என்னிடம் தருகிறாயா?. அதை நான் வீட்டுக்கு கொண்டுபோய், அதற்கு மருத்துவம் பார்த்து, அது குணமடைந்ததும் உன்னிடமோ அல்லது இங்கிருக்கும் காட்டிலோ விட்டு விடுகிறேன்! என்றார். 

அதற்கு அந்த சிறுவன் அவரிடம், வேண்டாம் அம்மா! இந்த பறவையை நானே பார்த்து கொள்கிறேன். ஏனென்றால், இந்த பறவையை என்னைவிட சிறப்பாக வேறு யாராலும் கவனித்துக்கொள்ள முடியாது என்றான். 

உன்னைப் போல அந்த பறவையை வேறு யாராலும் சிறப்பாக கவனித்துக்கொள்ள முடியாது என்று எதை வைத்துச் சொல்கிறாய் என்று அந்த பெண்மணி கேட்க, சிறுவன் மெல்ல எழுந்து நின்றான். அப்போதுதான் அந்த சிறுவனின் ஒரு கால் ஊனம் என்பதை அந்த பெண் கவனித்தார். அவருக்கு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. இருந்தாலும் அதை அடக்கிக்கொண்டு, ஆமாம் தம்பி! நீ சொல்வதும் சரிதான். இந்த பறவையை உன்னை விட வேறு யாராலும் அவ்வளவு சிறப்பாக கவனித்துக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றார். 

 இந்த நிகழ்வில் அந்த சிறுவன் சிறகு முறிந்து போன பறவையின் துயரத்தை தன்னுடைய துயரமாக பார்த்தான். அதனால் தான் அந்த பறவையைத் தானே கவனித்து கொள்வது என்று முடிவு செய்தான். 

ஓர் உண்மையான மனிதனுக்கு அல்லது தலைவனுக்கு இருக்க வேண்டிய முதன்மையான தகுதி துன்புறும் சக மனிதனின் துன்பத்தை தன்னுள் ஏற்று, அவனுடைய துன்பத்தை இன்பமாக மாற்ற முயலுவதே. ஆண்டவராகிய இயேசுபிரான் மக்களின் துன்பத்தை தன்னுடைய துன்பமாக ஏற்றுக்கொண்டார். இவ்வாறு அவர் பேசினார்.

Post a Comment

أحدث أقدم

Search here!