தெரிந்துகொள்வோம் : காட்டை விட்டு யானைகள் வௌிவருவது ஏன்? 


இன்று நாம் காடு என வரையறுத்து வைத்துள்ள இடமே மிகவும் ஒருதலைப்பட்சமானது. காட்டுயிர்கள் வாழ மிகவும் சொற்பமான பகுதியே ஒதுக்கப்பட்டுள்ளது. 

அது மட்டுமல்லாமல் காடு என்பது விலங்கு காட்சி சாலைபோல வேலியிடப்பட்ட கூண்டல்ல. உயிரினங்கள் காட்டை விட்டு வெளியே வருவது தவறு என்ற பார்வை, அடிப்படையிலேயே தவறானது. யானைகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்பதற்கு அறிவியல் பூர்வமான சான்றுகள் இல்லை. இந்தியா முழுவதுமே நன்கு பாதுகாக்கப்படும் காடுகள் வெறும் ஐந்து சதவீதம் தான். எஞ்சியுள்ள காடுகள் தொடர்ச்சியற்றும், சிறு துண்டுகளாக சின்னாபின்னப்படுத்தப்பட்டும் உள்ளன. மனிதர்களால் பயிர் செய்ய முடியாத பாறைகளும் முகடுகளுமே காடு என்ற பெயரில் பெருமளவு எஞ்சியுள்ளன. காட்டுயிர்கள் வாழ்வதற்கு தோதான ஆற்றுப்படுகைகள், பள்ளத்தாக்குகள், ஆற்றோரங்கள், தடாகங்கள் போன்றவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கோடைக்காலத்தில் நீர்நிலைகள் வற்றும்போது, அந்த இடங்களில் நன்கு புல் வளர்ந்திருக்கும். வறட்சியான சூழலில் அங்கே மட்டுமே தீனியும் தண்ணீரும் கிடைக்கும். அதையும் ஆக்கிரமித்து குறுகிய கால வெள்ளாமை செய்வதாலும் ஆடு, மாடுகளை மேய்ப்பதாலும் எந்நேரமும் மனித நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் கடும் கோடை காலத்தில் தாகத்தை தணித்துக்கொள்வதற்கே, காட்டுயிர்கள் பல மணி நேரம் காத்திருக்க நேரிடுகிறது. இப்படியாக காட்டை ஒட்டியுள்ள மேய்ச்சல் பகுதியும் அவற்றுக்கு மறுக்கப்படுகிறது. அவை உயிர்வாழ்வதற்கு அவசியமான முக்கிய இடங்களை பலவந்தமாக எடுத்துக்கொண்டு, வறண்டு கிடக்கும் பொட்டல் தரைகளை மட்டும் விட்டால் உணவுக்கும் தண்ணீருக்கும் அவை எங்கே செல்லும்? இந்த சூழலில்தான் காட்டுக்கு அருகில் பசுமையாக தெரியும் வெள்ளாமை செய்யப்பட்ட இடங்களை நாடி யானைகள் வருகின்றன. ஏற்கனவே கடன் வாங்கி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு, இது பெரும் இடைஞ்சலாகி விடுகிறது. நிர்ப்பந்தம் காரணமாக காட்டை விட்டு யானைகள் வெளியே வந்தாலும், தங்களுக்கு பாதுகாப்பு காடுதான் என்று அவை திரும்பிச் செல்ல நினைக்கும்போது, அது முடிவதில்லை. காரணம் வெடி, மணல் குவாரிகள், செங்கல் சூளைகள், மின்வேலிகள், கம்பிவேலிகள், பார்வையை கூசச் செய்யும் மின்விளக்கு போன்றவற்றால் திரும்பிச் செல்வதற்கான வலசை பாதை தெரியாமல் ‘கண்ணைக் கட்டி நாட்டில் விட்டதைப் போல’ அவை திக்குமுக்காடுகின்றன. வனத்துறையினருக்கு யானைகளை சமாளிப்பது பெரிய சவாலாக உள்ளது. பொதுவாக ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டுவதற்கு தற்காலிக தீர்வாக வெடி வெடித்து காட்டுக்கு விரட்டும் மேலோட்டமான செயல்களை அவர்கள் மேற்கொள்கிறார்கள். யானை எதிர்கொள்ளலை தவிர்க்க பல்வேறு வழிகளை ஆராய்ச்சியாளர்கள் முன்வைத்துள்ளனர். அதை அதிகாரிகள் பின்பற்றினால் தீர்வு கிடைக்கலாம்.

Post a Comment

أحدث أقدم

Search here!