10, 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு கப்பற்படையில் குவிந்துள்ள வேலைவாய்ப்புகள் 


தகுதியும், திறமையும் உள்ள இளைஞர்களுக்கு இந்திய ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. இந்திய ராணுவத்தின் தரைப்படையில் (ஆர்மி) தமிழகத்தில் இருந்து வேலை பார்ப்பவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். ஆனால், முப்படைகளிலும் வேலைவாய்ப்பு உள்ளது என்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. 

அதாவது, தரைப்படை, கப்பற்படை மற்றும் விமானப்படை என ராணுவத்தில் 3 பிரிவுகள் உள்ளன. இதில் பெரும்பாலும் தரைப்படை பணிக்கு மட்டுமே விண்ணப்பிக்கின்றனர். அதாவது, 10-ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு செல்கின்றனர். ஆனால், 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணித பாடங்களை படித்தவர்களுக்கு கப்பற்படை மற்றும் விமானப்படையில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. 


இதில், கப்பற்படையில் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இது குறித்து மதுரையில் உள்ள என்.சி.சி. கப்பற்படைப்பிரிவு கேப்டன் செந்தில்குமார் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இதோ... ‘‘கப்பற்படையில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு மாலுமி (செய்லர்) பிரிவில் பணிவாய்ப்பு உள்ளது. இதற்காக ஜூலை மற்றும் ஜனவரி மாதங்களில் ஆட்சேர்ப்பு இந்தியா முழுவதும் நடக்கும். இதில் எழுத்துத்தேர்வு, உடற்தகுதித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். 

 எழுத்துத்தேர்வுகள் கொள்குறி வினாத்தாள் அடிப்படையில் ஆன்லைனில் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உடற்தகுதித்தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மருத்துவ தேர்வு நடக்கும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆரம்ப சம்பளமாக ரூ.30 ஆயிரம் மற்றும் அலவன்சுகள் கிடைக்கும். நான் தேர்வு வாரியத்தலைவராக இருந்த போது, தமிழக மாணவர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருப்பதை உணர்ந்துள்ளேன். 

குறிப்பாக 3 சதவீதத்துக்கும் குறைவான தமிழக மாணவர்களே இந்த தேர்வில் கலந்து கொள்கின்றனர். அதிலும், நகர்ப்புறங்களை சேர்ந்த மாணவர்களே பங்கு பெறுகின்றனர். இந்த தேர்வுகள் அனைத்தும் வெளிப்படை தன்மையுடன் நடத்தப்படும். தகுதி மற்றும் திறமை உள்ள மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதியாக கிடைக்கும். தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருக்கும். இந்த வருடம் முதல் சுமார் 6 ஆயிரம் மாலுமிகள் கப்பற்படைக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். 


ஓய்வு பெறும் வீரர்கள் எண்ணிக்கை மற்றும் கப்பற்படை விரிவாக்கம் போன்ற அடிப்படையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே, தமிழக கிராமப்புற பள்ளி களில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இதற்காக பயிற்சி வகுப்புகள் நடத்தி அவர்களை வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களாக உருவாக்க ஒவ்வொரு வரும் முயற்சி செய்ய வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சிறிது கடின முயற்சி செய்து எழுத்துத்தேர்வுக்கு தயாரானால் உடனடியாக கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கிறது. 

இந்த வாய்ப்பு கப்பற்படையில் மிக அதிகமாக உள்ளது. 12-ம் வகுப்பு முடித்த பின்னர் என்ஜினீயரிங், மருத்துவம் தவிர உடனடியாக அதிக வருமானம் தரக்கூடிய படிப்புகள் உள்ளன. அதில், கப்பற்படை தேர்வும் ஒன்றாகும். இயற்பியல், கணிதம், வேதியியல் மற்றும் இயற்பியல், கணிதம், உயிரியல் படித்த மாணவர்களுக்கு, பயிற்சி முடித்த பின்னர், சம்பள உயர்வுடன் பல்வேறு சலுகைகளும் உண்டு. கடற்படையில் பணியில் சேர்ந்தால் பல மாதங்கள் நடுக்கடலில் கப்பலில் இருக்க வேண்டும் என்ற தவறான கருத்து சிலரிடம் உள்ளது. 


வணிக கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு மட்டும் தான் இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும். கப்பற்படையில் பணியாற்றுபவர்களுக்கான வேலை என்பது தேவைக்கு ஏற்றது. பெருநகரங்களில் உள்ள கப்பற்படை தளங்களிலும் பணிகள் இருக்கும். பாதுகாப்பு பணிகள், ரோந்துப்பணிகள், போர் ஒத்திகைப்பயிற்சிகள், அயல்நாட்டு பணிகள் போன்றவற்றுக்கு ஏற்ப கடல் பயணம் செய்யவேண்டியது இருக்கும். அத்துடன், கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னரும் பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளன. 15 வருடம் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர், அரசுத்துறைகளில் பணியாற்ற முடியும். இது குறித்த விழிப்புணர்வு இல்லாததால், மாணவர்கள் வேலைவாய்ப்பற்ற தன்மையை சந்திக்கின்றனர். கடற்படை வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை https://www.joinindiannavy.gov.in என்ற இணைய தளத்தில் காணலாம். 

உங்களுக்கு அருகில் உள்ள ராணுவ அலுவலகத்தில் உள்ள மக்கள்தொடர்பு அதிகாரிகள் மற்றும் என்.சி.சி. அலுவலக அதிகாரிகள், பள்ளி-கல்லூரிகளில் பணிபுரியும் என்.சி.சி. அதிகாரிகளை அணுகினால் அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள்’’ என்று கேப்டன் செந்தில்குமார், இளம் மாணவ-மாணவிகளுக்கு வழிகாட்டுகிறார். எழுத்துத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உடற்தகுதித்தேர்வு நடத்தப்படும். 

அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மருத்துவ தேர்வு நடக்கும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆரம்ப சம்பளமாக ரூ.30 ஆயிரம் மற்றும் அலவன்சுகள் கிடைக்கும். கடற்படையில் பணியில் சேர்ந்தால் பல மாதங்கள் நடுக்கடலில் கப்பலில் இருக்க வேண்டும் என்ற தவறான கருத்து சிலரிடம் உள்ளது. வணிக கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு மட்டும் தான் இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும்.

Post a Comment

أحدث أقدم

Search here!