முத்திரை தாள் விற்பனைக்கு 12 வரை விண்ணப்பிக்கலாம்


 முத்திரைத்தாள் விற்பனையாளர் உரிமம் பெற விரும்புவோர், பிப்., 12 வரை விண்ணப்பிக்கலாம்' என, பதிவுத்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுதும், 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களை சார்ந்து, ஆவண எழுத்தர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் செயல்படுகின்றனர்.

இதில், பல ஆண்டுகளாக காலியாக உள்ள முத்திரைத்தாள் விற்பனையாளர் இடங்களை நிரப்ப, பதிவுத் துறை முடிவு செய்தது. இதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. தமிழகம் முழுதும், 1,376 இடங்கள் காலியாக உள்ள நிலையில், 800 இடங்களின் பட்டியல் மட்டும், தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

 பதிவு மாவட்ட வாரியாக காலி இடங்கள் நிலவரத்தை பதிவுத்துறை வெளியிட்டு உள்ளது.இதன்படி, வட சென்னையில், 31; மத்திய சென்னையில், 21; தென் சென்னையில், 38; காஞ்சிபுரத்தில், 51; செங்கல்பட்டில், ஐந்து இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், அதிகபட்சமாக, கோவை பதிவு மாவட்டத்தில், 106 இடங்கள் காலியாக உள்ளன. 

இந்த இடங்களுக்கான உரிமம் பெற விரும்புவோர், பிப்., 12 வரை சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை அணுகி, விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை, பிப்., 12க்குள் மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் அளிக்க வேண்டும். 

 இதுகுறித்து, சார் பதிவாளர்கள் கூறியதாவது:

பதிவுத்துறை அறிவிப்பில், பல பதிவு மாவட்டங்களில், காலி இடங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.பட்டுக்கோட்டை பதிவு மாவட்டத்தில், 32 இடங்கள் காலியாக உள்ள நிலையில், நான்கு இடங்கள்; நாகை மாவட்டத்தில், 56 இடங்கள் காலியாக இருக்கும் நிலையில், ஆறு இடங்கள் மட்டுமே, காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதை தெளிவுபடுத்தினால், கூடுதல் நபர்கள் உரிமம் பெறலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Post a Comment

أحدث أقدم

Search here!