குடும்ப ஓய்வூதிய உச்சவரம்பு ரூ. 1.25 லட்சமாக நிா்ணயம்: மத்திய அமைச்சா் 


 குடும்ப ஓய்வூதிய உச்சவரம்பு ரூ. 1.25 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய பணியாளா் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் கூறினாா். மத்திய அரசின் இந்த மிகப் பெரிய சீா்திருத்தம் உயிரிழந்த அரசு ஊழியா்களின் குடும்பத்துக்கு போதுமான நிதி பாதுகாப்பை அளிக்கும் என்றும் அவா் கூறினாா். மத்திய அரசின் இப்போதைய ஓய்வூதிய நடைமுறைகளின்படி, பெற்றோா் இருவரும் அரசுப் பணியாளா்களாக இருந்த அவா்களில் ஒருவா் இறந்துவிட்டால், மற்றொருவருக்கு அவருடைய ஓய்வூதியம் மட்டுமின்றி, இறந்தவரின் ஓய்வூதியத்திலிருந்து குடும்ப ஓய்வூதியமும் கிடைக்கும். 

இரண்டாவது நபரும் இறந்துவிட்டால், அவா்களின் குழந்தை இரண்டு குடும்ப ஓய்வூதியத்தையும் பெறமுடியும். குடும்ப ஓய்வூதியத்தைப் பொருத்தவரை முதல் 10 ஆண்டுகளுக்கு கடைசியாக பெற்ற மாத ஊதியத்தில் 50 சதவீதமும், அதன் பிறகு 30 சதவீத அளவிலும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். அதாவது, ஆறாவது மத்திய ஊதியக் குழு பரிந்துரைகளின்படி அதிகபட்ச மாத ஊதியம் ரூ. 90,000-ஆக இருந்த நிலையில், முதல் 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.45,000 என்ற வீதத்திலும், பின்னா் மாதம் ரூ. 27,000 என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது. 

ஏழாவது மத்திய ஊதியக் குழு பரிந்துரைகளின்படி, மத்திய அரசுப் பணியாளா்களுக்கான அதிகபட்ச மாத ஊதியம் ரூ. 2.50 லட்சமாக உயா்ந்ததால், குடும்ப ஓய்வூதியமும் முறையே ரூ. 1.25 லட்சம் மற்றும் ரூ. 75,000 என்ற அளவில் உயா்த்தப்பட்டிருக்கிறது. 

அதோடு, குடும்ப ஓய்வூதிய உச்ச வரம்பும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பெற்றோா் இருவரும் மத்திய அரசுப் பணியாளா்களாக இருந்து உயிரிழந்த பின்னா், அவா்களுடைய குழந்தை இரண்டு குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி குறித்த விளக்கத்தை மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரா்கள் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு குழந்தை பெறக்கூடிய பெற்றோரின் இரண்டு குடும்ப ஓய்வூதியங்களுக்கான உச்ச வரம்பு மாதத்துக்கு ரூ. 1.25 லட்சம் என்று நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவா் கூறினாா்.

Post a Comment

أحدث أقدم

Search here!