தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியீடு: துணை மருத்துவப் படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு 9-ந்தேதி தொடங்குகிறது 


 துணை மருத்துவப் படிப்புக்கு வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இதற்கான தரவரிசை பட்டியலை மருத்துவக் கல்வி இயக்ககம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. துணை மருத்துவப் படிப்பு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நிறைவு பெற்ற பிறகு, துணை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தாமதமாக தொடங்கியது. 3 கட்டங்களாக நடத்தப்பட்டு கடந்த 1-ந்தேதியுடன் கலந்தாய்வு நிறைவு பெற்று இருக்கிறது. இந்த நிலையில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்ம்., ஆய்வக தொழில்நுட்பம் உள்பட 17 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது தொடங்கும்? அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்? ஆன்லைனில் கலந்தாய்வு நடக்குமா? நேரடியாக அழைக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படுமா? என அந்த படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் காத்து இருந்தனர். 22 ஆயிரத்து 910 இடங்கள் அதன்படி, துணை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற இருப்பதாக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை அலுவலகம் நேற்று தெரிவித்து இருக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,590 இடங்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 13 ஆயிரத்து 858 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்பட 21 ஆயிரத்து 320 இடங்களுக்கும் என மொத்தம் 22 ஆயிரத்து 910 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது. இந்த துணை மருத்துவப் படிப்புகளுக்கு மொத்தம் 38 ஆயிரத்து 244 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், அதில் 236 விண்ணப்பங்கள் தகுதியற்றதாகவும், 674 விண்ணப்பங்கள் போலியானதாகவும் கண்டறியப்பட்டு, 37 ஆயிரத்து 334 விண்ணப்பங்கள் தகுதியான விண்ணப்பங்களாக மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. ஆக 22 ஆயிரத்து 910 இடங்களுக்கு, 37 ஆயிரத்து 334 பேர் கலந்தாய்வில் பங்கு பெற இருக்கின்றனர். கலந்தாய்வு மேலும், விண்ணப்பித்து தகுதியான மாணவ-மாணவிகளின் தரவரிசை பட்டியல் https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. கலந்தாய்வை பொறுத்தவரையில் வருகிற 9-ந்தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. 9-ந்தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், அதனைத் தொடர்ந்து பொதுப்பிரிவு உள்பட அனைத்து பிரிவு மாணவர்களுக்குமான கலந்தாய்வு நடக்க உள்ளது. அதுதொடர்பாக முழு தகவல்கள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாக வாய்ப்பு இருக்கிறது.

Post a Comment

أحدث أقدم

Search here!