நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைவு: அலுவலகங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை 


 நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அலுவலகங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
சுகாதார அமைச்சகம் வெளியீடு
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு விதித்த மத்திய அரசு பின்னர் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் இந்த தளர்வுகளுடன், வழிகாட்டு நெறிமுறைகளையும் அடிக்கடி அறிவித்து வருகிறது. அந்த வகையில் அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய புதிய நிலையான இயக்க நெறிமுறைகளை (வழிகாட்டுதல்கள்) மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
அறிகுறி இல்லாதவர்களுக்கே அனுமதி
* அலுவலகங்களில் கொரோனா அறிகுறி இல்லாத ஊழியர்கள், பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. பொது இடங்களில் ஒவ்வொரு தனி நபரும் 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும். எப்போதும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். * கட்டுப்பாட்டு மண்டலங்களில் இயங்கும் அலுவலகங்கள் திறக்க அனுமதி இல்லை. அதேநேரம் மருத்துவ மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான நிறுவனங்களில் வெளிப்புறங்கள் மட்டும் திறக்க அனுமதி. * கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் ஊழியர்கள், அது குறித்து மேல் அதிகாரிக்கு தெரிவித்து விட்டு, கட்டுப்பாடு தளர்த்தும் வரை வீட்டிலேயே இருக்க வேண்டும். அந்த ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதிக்க வேண்டும்.

தொற்று நீக்க நடவடிக்கை
* ஓரிரு நபர்களுக்கு கொரோனா பாதிப்பு தென்பட்டால் அவர்கள் இருந்த இடங்கள் மற்றும் முந்தைய 48 மணி நேரத்தில் அவர்கள் சென்ற பகுதிகளில் மட்டும் தொற்று நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு பணிகளை தொடரலாம். * ஏராளமான ஊழியர்கள் பாதிக்கப்பட்டால், நடைமுறைகளுக்கு உட்பட்டு அந்த ஒட்டுமொத்த பிளாக் அல்லது கட்டிடத்துக்கும் தொற்று நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு பணிகளை தொடர வேண்டும்.

கூட்டங்களுக்கு அனுமதி இல்லை
* அலுவலகத்துக்கு வரும் ஊழியர்கள் சோப் மூலம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். கையில் அசுத்தம் இல்லையென்றாலும் கைகழுவும் செயலை மேற்கொள்ள வேண்டும். அலுவலக வாயிலில் சானிடைசர்கள், வெப்பம் அளவிடும் கருவி போன்றவை இருக்க வேண்டும். * முடிந்தவரையில் கூட்டங்களை காணொலி மூலம் நடத்த வேண்டும். அதிக எண்ணிக்கையிலான நபர்கள் நேரடியாக பங்கேற்கும் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை. மின்தூக்கிகளில் அதிக நபர்களுக்கு அனுதி இல்லை. இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!