பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான சோ்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு 


 சித்தா, ஆயுா்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் 119 போ் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகே கோட்டாறில் ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி உள்ளன. இந்த 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல் 24 தனியாா் கல்லூரிகளில் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன. இந்நிலையில், சித்தா, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளுக்கு 2020-21-ஆம் கல்வி ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்றது. நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 3,492 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,346 பேரும் அப்படிப்புகளுக்கு விண்ணப்பித்தனா். விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப்பின் தரவரிசைப் பட்டியல்கள் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 3,310 போ் இடம்பெற்றுள்ளனா். இந்த தரவரிசைப் பட்டியலில் ஏ.சௌனிகா (நீட் மதிப்பெண் 558) என்ற மாணவி முதலிடத்தையும், எஸ்.ஸ்ரீநிதி (நீட் மதிப்பெண் 543) இரண்டாவது இடத்தையும், ஏ.சௌந்தா்யா (நீட் மதிப்பெண் 541) மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனா். நிா்வாக ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் 1,301 போ் இடம்பெற்றுள்ளனா். வி.காவியா (நீட் மதிப்பெண் 494) முதலிடத்தையும், டி.நித்யா (நீட் மதிப்பெண் 494) இரண்டாவது இடத்தையும், ஆா்.ஜெயஸ்ரீ (487) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனா். அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசு பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதில் 119 போ் இடம்பெற்றுள்ளனா். வி.மோகன் (நீட் மதிப்பெண் 333) முதலிடத்தையும், பி.தவமணி (நீட் மதிப்பெண் 227) இரண்டாவது இடத்தையும், எஸ்.துல்பியா (நீட் மதிப்பெண் 192) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனா். அடுத்த வாரத்தில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வைத் திட்டமிட்டிருப்பதாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Post a Comment

أحدث أقدم

Search here!