டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுகளைப் போல சப்-இன்ஸ்பெக்டர் தேர்விலும் தமிழ் வழி இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு 


டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுகளைப் போல சப்-இன்ஸ்பெக்டர் தேர்விலும் தமிழ் வழி இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. 

சப்-இன்ஸ்பெக்டர் பணி தேர்வு ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நான் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2,, பட்டப்படிப்பு ஆகியவற்றை தமிழ்வழியில் படித்து உள்ளேன். சப்-இன்ஸ்பெக்டர் பணிக்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த எழுத்துத்தேர்வில் பங்கேற்று, மொத்தம் 70 மதிப்பெண்களுக்கு 51 மதிப்பெண்கள் பெற்றேன். 

உடல்திறன் தேர்வில் 15 மதிப்பெண்களுக்கு 12 மதிப்பெண்கள் பெற்றேன். இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி பொதுபிரிவினரில் இந்த பணிக்கு தேர்வானவர்களின் உத்தேச பட்டியல் வெளியானது. ஆனால் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் நான் தகுதி பெற்றுள்ளதால், எனக்கும் அழைப்பு விடுத்து இருக்க வேண்டும். எனவே டி.என்.பி.எஸ்.சி.யை போல சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கும், தமிழ்வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை கடைப்பிடிக்க உத்தரவிட வேண்டும். 



அதுவரை சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான நேர்முக தேர்வுக்கான உத்தேச பட்டியலுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதேபோல மேலும் பலர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உத்தேச பட்டியலை வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டது. 


 இறுதிக்கட்டத்தில் உள்ளது இந்தநிலையில் இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜராகி, “தமிழ்வழி இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படாததால் ஏராளமானவர்கள் இந்த பணியில் சேர முடியாமல் போகிறது. தமிழ் வழி இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதற்கான நோக்கமும் முழுமையாக நிறைவேறவில்லை” என்று வாதாடினார். பின்னர் அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயணன் ஆஜராகி, “தற்போதைய சப்-இன்ஸ்பெக்டர் பணி தேர்வு இறுதிக்கட்டத்தில் உள்ளது. 

எதிர்காலங்களில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்விலும் தமிழ்வழி இடஒதுக்கீடு விதிமுறைகள் பின்பற்றப்படும்” என்றார். தமிழக அரசுக்கு உத்தரவு விசாரணை முடிவில், “மனுதாரர்கள் ஏற்கனவே பெற்றுள்ள கட்-ஆப் மதிப்பெண் மூலம் அவர்களுக்கு தமிழ் வழி இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி வழங்க பரிசீலிக்க வேண்டும். 

எதிர்காலங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளைப் பின்பற்றி சப்-இன்ஸ்பெக்டர் பணி தேர்விலும் தமிழ் வழி இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும்” என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.


Post a Comment

أحدث أقدم

Search here!