அரசு பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சிகள் _  ‘ஐ.டி. அடாப்ட்’


அரசு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ‘நவீன கம்ப்யூட்டர் லேப்’ அமைத்துக் கொடுக்கிறார்கள், டெமினோஸ் ஐ.டி. குழுவினர். முழுக்க முழுக்க ஐ.டி. நிறுவன ஊழியர்களால் கட்டமைக்கப்பட்டிருக்கும் டெமினோஸ் குழு வினர், ஏழை பள்ளி மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளிலும், தொழில்நுட்ப கல்லூரிகளிலும் உயர்தர கணினி மையங்களை அமைத்துக் கொடுக்கிறார்கள். அதை முறைப்படி தொடர்ந்து பராமரிக்கவும் செய்கிறார்கள். ‘ஐ.டி. அடாப்ட்’ என்ற பெயரில் கடந்த 5 வருடங்களாக சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற பகுதிகளில் இவர்களது சேவை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

அதுபற்றி அத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான பிஜிமோன் மனம் திறக்கிறார். 

 * எதற்காக இந்த முயற்சி? 

 டெமினோஸ் குழு, பல வருடங்களாக டிஜிட்டல் பேங்கிங் சார்ந்த மென்பொருள் வடிவமைப்பு வேலைகளை முன்னெடுத்து வருகிறது. சமூகத்திற்காக உழைத்து, அதிலிருந்து பெறப்படும் லாபத்தை, சமூகத்திற்கே திரும்பக் கொடுக்கும் முயற்சிதான், இந்த ‘ஐ.டி. அடாப்ட்’ திட்டம். இதன் மூலம் பல பள்ளிகளின் ஐ.டி. தேவைகளை நிறைவேற்றி வருகிறோம். 

 * என்னென்ன செய்கிறீர்கள்? 

 ஐ.டி., தொழில்நுட்பம் சார்ந்த குழு என்பதாலும், அங்கம் வகிப்பவர்களில் பெரும்பாலானோர் ஐ.டி. ஊழியர்கள் என்பதாலும், எங்களுக்கு தெரிந்த, நன்கு பழக்கமான ஐ.டி. விஷயங்களையே சமூகத்திற்கு திரும்பக் கொடுக்கிறோம். ஐ.டி. குழு என்பதால், எங்களால் கம்ப்யூட்டர் லேப்களை அமைத்துக் கொடுக்க முடியும். அதனால் தேவை அதிகமாக இருக்கும் அரசு பள்ளிகள், கல்லூரிகளுக்கு உயர் தரத்திலான கம்ப்யூட்டர் லேப்-ஐ அமைத்துக் கொடுத்திருக்கிறோம்.

 * எங்கெல்லாம் அமைத்திருக்கிறீர்கள்? 

 சென்னை நகரில் பல பகுதிகளில் நவீன கம்ப்யூட்டர் லேப்களை அமைத்திருக்கிறோம். குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் நவீன தரத்திலான கம்ப்யூட்டர் லேப் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிகளிலும், அவர்களுக்கு தேவையாக நவீன பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் லேப் என்பதை தாண்டி, அடிப்படை வசதிகள் குறைந்த பள்ளிகளுக்கு கழிவறை அமைத்தல், புதுமையான வகுப்பறைகளை அமைத்துக் கொடுத்தல் போன்ற முயற்சிகளையும் முன்னெடுத்திருக்கிறோம். 

 * எதற்காக இந்த முயற்சி? 

 திறமையான மாணவர்களுக்கு உயர்தர கணினி பயிற்சியும், கணினி சார்ந்த மென்பொருள் பயிற்சியும் கிடைக்கப்பெற வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். தனியார் பள்ளிகளில் கிடைக்கக்கூடிய கணினி சார்ந்த பாடத்திட்டமும், பயிற்சிகளும் அரசு பள்ளி மாணவர்களுக்கும், அரசு கல்லூரி மாணவர்களுக்கும் கிடைக்கப் பெற வேண்டும் என்பதற்காகவே முழு முனைப்போடு இயங்குகிறோம். 

 * வேறு என்ன செய்கிறீர்கள்? 

 கணினி மையங்கள் அமைப்பதோடு எங்களது பணி முடிவடைந்து விடுவதில்லை. அதை பராமரிக்கிறோம். அரசு பள்ளி மாணவர்களுக்கு முறையான கணினி பயிற்சியும், மென்பொருள் சார்ந்த பயிற்சியும் வழங்குகிறோம். அதற்காக பிரத்யேக தன்னார்வலர் அமைப்பும் வழி நடத்தப்படுகிறது. ஒரு பள்ளிக்கு, ஒரு குழு என்ற முறையில் மாணவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். மென் பொருள் சார்ந்த பயிற்சிகளையும், பாடத்திட்டங்களையும் விடுமுறை நாட்களில் பயிற்றுவிக்கிறோம். அதேபோல கல்வி உதவி தேவைப்படும் மாணவ-மாணவிகளுக்கு, பள்ளி மற்றும் கல்லூரி களுக்கான ஸ்காலர்ஷிப் வழங்கி வருகிறோம். இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதன்மூலம் பலனடைந்துள்ளனர். 

 * அடுத்தக்கட்ட முயற்சி என்ன? 

 இதுவரை அமைத்து கொடுத்த கம்ப்யூட்டர் மையங்களுக்கு, சோலார் முறையில் சக்தி ஊட்ட திட்டமிட்டிருக்கிறோம். ஏற்கனவே ஒரு சில பள்ளிகளில் சோலார் திட்டத்தை முன்னெடுத்து முடித்து விட்டோம். இனி அமைக்கப்பட இருக்கும் எல்லா கம்ப்யூட்டர் மையங்களுமே, சோலார் முறையில் ஒளிர இருக்கிறது. இதன்மூலம் அரசு பள்ளியின் மின்கட்டணச் செலவைக் குறைப்பதுடன், கணினி மையங்களை நேர கட்டுபாடு இன்றி உபயோகிக்கவும், மென்பொருள் சார்ந்த பயிற்சி தங்கு தடையின்றி பெறவும் நல்ல வாய்ப்பாக அமையும்.

Post a Comment

أحدث أقدم

Search here!