செ.கு.எண்:39 நாள்:03.08.2021 

“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தீரன் சின்னமலை 216ஆவது நினைவு நாள் செய்தி” 

தன்னலமற்ற பொதுச் சேவைக்கும், தனிச் சிறப்பான நாட்டுப் பற்றுக்கும் தகுதிமிக்க அடையாளமாகத் திகழும் தீரன் சின்ன மலை அவர்களின் 216ஆவது நினைவு நாள். அவரது தீரம் அளப்பரியது; பெருமைக்குரியது. ஏழைகளுக்காக வரிப்பணத்தை வழிமறித்துக் கைப்பற்றிய போது, “சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்" என்று துணிச்சலாகச் சொன்னவர் அவர்! இளைஞர்களின் எழுச்சி நாயகரான அவருடைய புகழ் பாடும் வகையில் - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான், அவருக்குச் சென்னை கிண்டியில் சிலை வைக்கப்பட்டது. 

கொங்கு வேளாளர் சமுதாயத்தைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து - கொங்குப் பகுதி இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறவேண்டும் என்ற உயரிய நோக்கில் வாய்ப்புகள் உருவாக்கியதும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகித்த நேரத்தில்தான், 31.7.2005 அன்று சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களுக்கு நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. ஆங்கிலேய அரசக்குச் சிம்ம சொப்பனமாய் விளங்கி, தூக்குக்கயிற்றை முத்தமிடும் நேரத்திலும் சிங்கமென வாழ்ந்த மாவீரன் தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும் தீரத்தையும் நாட்டுப்பற்றையும் நாமும் பெறுவோம். அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உண்மையாக இருப்பதே தீரன் சின்னமலைக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும். 

"மக்களின் வரிப்பணம் ஏழைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்" என்ற தீரன் சின்ன மலை அவர்களின் கனவை நனவாக்கிடும் உறுதியுடன் திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ந்து செயலாற்றும் என்று உறுதிகூறி “வாழ்க அவரது புகழ்!” எனப் போற்றுகிறேன், வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9





Post a Comment

أحدث أقدم

Search here!