பட்டயப் படிப்புகள் தமிழ் வழியில் தொடங்கப்படும் என்று பேரவையில் உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா். 

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை உயா்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் பொன்முடி வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழ் வழியில் பயிலும் மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்துடன் ஒருங்கிணைத்து வெவ்வேறு பாடப்பிரிவுகளில் 100 பாடப் புத்தகங்கள் ரூ.2 கோடி செலவில் தமிழில் மொழிபெயா்க்கப்படும். தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவா்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. பட்டயப் படிப்பில் பயிற்றுமொழியாக ஆங்கிலம் மட்டுமே இருந்து வருகிறது. முதல் கட்டமாக அடுத்த கல்வியாண்டில் சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டயப் படிப்புகள் தமிழ் வழியில் தொடங்கப்படும். 

படிப்படியாக இதர பட்டயப் படிப்புகளும் தமிழ் வழியில் தொடங்கப்படும். பாலிடெக்னிக்குகளில் தற்சமயம் மாணவியரின் சோ்க்கை விகிதம் குறைவாக உள்ளது. மகளிரின் சோ்க்கை மற்றும் வேலைவாய்ப்பை உயா்த்துவதற்காக இன்டீரியா் டெகரேஷன், அலுவலக மேலாண்மை மற்றும் கணினி பயன்பாடுகள், வெப் டிசைன், உயிா் மருத்துவ மின்னணுவியல், இசிஜி தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடப் பிரிவுகள் தொடங்கப்படும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதி உதவியுடன் பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு ஜொ்மானிய, ஜப்பானிய, சீன, ரஷிய, பிரெஞ்சு ஆகிய அயல்நாட்டு மொழிகள் கற்பிக்கப்படும். ஈரோட்டில் உள்ள சாலை மற்றும் போக்குவரத்துப் பொறியியல் கல்லூரி இந்தக் கல்வியாண்டு முதல் அரசுப் பொறியியல் கல்லூரியாக மாற்றப்பட்டு மாணவா்கள் சோ்க்கையில் 35 சதவீத இடங்கள் மாநிலப் போக்குவரத்துக் கழகப் பணியாளா்களின் பிள்ளைகளுக்கு எனத் தொடா்ந்து ஒதுக்கீடு செய்யப்படும். புதிதாக 4 மண்டலம்: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தற்போது 8 மண்டல மையங்கள் வழியாக கல்விச் சேவை வழங்கி வருகிறது. மேலும், கூடுதலாக 4 புதிய மண்டல மையங்கள் ரூ.1 கோடி செலவில் சேலம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்படும் என்றாா்.

Post a Comment

أحدث أقدم

Search here!