அண்டார்டிகாவில் 138 எரிமலைகள் உள்ளன. இவற்றில் 47 எரிமலைகள் ஏற்கனவே அறியப்பட்டவை. அண்மையில் புதிதாக 91 எரிமலைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அண்டார்டிகா பனிக்கட்டியால் மூடப்பட்ட கண்டம். இந்த எரிமலைகளில் ஒன்று மட்டும்தான் வெளியே தெரியும் வகையில் உள்ளன. 

அது அண்டார்டிகாவின் விளிம்பு அருகே அமைந்த டிசப்ஷன் தீவில் உள்ளது. மற்ற எரிமலைகள் பனிக்கட்டிக்கு அடியில் புதைந்து கிடக்கின்றன. சில எரிமலைகள் நான்கு கிலோ மீட்டர் ஆழம் கொண்ட பனிக்கட்டிக்கு அடியில் உள்ளன. டிசப்ஷன் தீவில் அமைந்துள்ள எரிமலையின் பெயர் எரிபஸ். இது மிக உயரமானது என்பதால் பனிக்கட்டியைத் துளைத்துக்கொண்டு வெளியே தெரிகிறது. 

இந்த எரிமலையின் முகப்பில் எப்போதும் நெருப்புக் குழம்பு உள்ளது. இது கடைசியாக 2011-ம் ஆண்டில் நெருப்பைக் கக்கியது. இன்னொரு எரிமலை அங்கு இருந்தாலும் அதன் நெருப்புக் குழம்பு வெளியே வர முடியாத வகையில் அதன் வாயைப் பனிப்பாளங்கள் மூடியுள்ளன. 

விஞ்ஞானிகள் ராடார் கருவிகளைப் பயன்படுத்தியும் நில அதிர்வு பதிவு கருவிகளைப் பயன்படுத்தியும் 91 புதிய எரிமலைகளையும் கண்டுபிடித்தனர். 

அண்டார்டிகாவை அடுத்துள்ள கடலின் அடித்தரையில் ஒரு வேளை மேலும் பல எரிமலைகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அண்டார்டிகாவைப் போர்த்தியுள்ள பனிக்கட்டிப் பாளங்களுக்கு அடியில்தான் நிலம் உள்ளது. அந்த நிலத்துக்கு அடியில் நிலக்கரிப் படிவுகளும் உள்ளன. அட்லாண்டிக் கடலின் வட கோடியில் உள்ள ஐஸ்லாந்தில் இதுபோன்ற நிலை உள்ளதால் அங்கும் பல எரிமலைகள் உள்ளன. 

அதேபோல கிழக்கு ஆப்பிரிக்காவிலும் எரிமலைகள் உள்ளன. அண்டார்டிகா சுமார் 150 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய துணைக் கண்டத்துடன் ஒட்டிக்கொண்டிருந்ததாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பின்னர் அது விலகி தனியே சென்றது. பிறகு அது மீண்டும் இந்திய துணைக் கண்டத்துடன் வந்து மோதியது. அப்போதுதான் இந்தியாவின் தென் பகுதியில் அமைந்த கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தோன்றியதாகக் கருதுகின்றனர். 

கண்டங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் போது விளிம்பு நெடுக மலைகள் தோன்றுவது உண்டு. இந்தியத் துணைக் கண்டமும் அண்டார்டிகாவும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை இப்படி மோதிக்கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அண்டார்டிகா கண்டம் இந்தியாவிலிருந்து 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனாலும் ஒருவர் கன்னியாகுமரியிலிருந்து நேர் தெற்காகக் கிளம்பினால் அண்டார்டிகாவுக்கு போய்ச் சேர்ந்துவிடலாம்.

Post a Comment

أحدث أقدم

Search here!