அசைவ சுவையில் சைவ உணவுகளா ! 

சைவப் பிரியர்கள் மட்டுமல்லாது அசைவப் பிரியர்களும் அசந்து போகும் அளவிற்கு வந்திருப்பவை தான் ‘மாக்மீட்’ எனப்படும் சைவ உணவுகள். வெளிநாடுகளில் மட்டுமே பிரபலமாக இருந்த இவை இப்பொழுது இந்தியாவிலும் பிரபலமாகி வருகின்றது. இந்தியாவின் பல்பொருள் அங்காடிகளிலும், இணையதள விற்பனைப் பகுதிகளிலும் குறிப்பாக பெரிய அளவில் நடத்தப்படும் சைவ உணவகங்களிலும் இவற்றைப் பார்க்க முடிகின்றது. 

 பிறந்தது முதலே சைவமாக இருப்பவர்களுக்கு இதுபோன்ற உணவுகளை சாப்பிட வேண்டும் என்று எந்த எண்ணமும் எழுவதில்லை. ஆனால் ஏதாவதொரு உடல்நலப் பிரச்சனை மற்றும் இரக்க குணத்தினால் இடையில் சைவமாக மாறுபவர்களுக்கு இவ்வகை ‘மாக் மீட்’ உணவுகள் அசைவம் சாப்பிட்ட திருப்தியை ஏற்படுத்துகின்றன. மேலும் அசைவ உணவு சாப்பிடுபவர்களும் இவற்றை ருசித்துச் சாப்பிட துவங்கியிருப்பதற்கு இவற்றின் சுலவயே காரணம் என்று சொல்லுமளவுக்கு தரமாகவும், சுவையாகவும் அதே நேரத்தில் தேவையான சத்துக்கள் நிறைந்ததாகவும் உள்ளது என்று சொல்லலாம். 

 இவ்வகை நகல் அசைவ உணவு அல்லது போலி இறைச்சி உணவுகளை எந்த எந்தப் பொருள்களை வைத்துத் தயாரிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம் வாங்க. இவை முற்றிலும் சைவப் பொருட்கள் மற்றும் பால் அல்லாத பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. சோயா, க்ளூட்டன், காய்கறி அமைப்பு புரதம் மற்றும் பலா இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது. பெரும்பாலும் சோயாவைக் கொண்டு தயாரிக்கப்படும் நகல் அசைவ இறைச்சி உணவுகளை அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. 

 விலங்கு இறைச்சி சாப்பிடாதவர்களுக்கு இதுபோன்ற நகல் இறைச்சி ஒரு மாற்று உணவு என்று சொல்லலாம். இவை ருசியில் மட்டுமல்லாது தோற்றத்திலும் ஆல் இறைச்சி உணவுகளுடன் போட்டி போடுகின்றன. மாக் சிக்கன் என்று அழைக்கப்படும் நகல் கோழி இறைச்சியானது வறுத்த க்ளூட்டன், சோய் சாஸ், சர்க்கரை, சோயா எண்ணெய் மற்றும் உப்பு இவற்றை வைத்து செய்யப்படுவதால் அவற்றை உண்ணும் பொழுது நிஜமான கோழி இறைச்சியைக் கடித்து உண்ணும் பொழுது ஏற்படும் சுவையும் உணர்வும் ஏற்படுகின்றது என்று சொல்லலாம். 

 இவை உடலுக்கு நன்மை அளிக்கும் உணவா? என்று கேட்டால் அதற்கு பதிலானது ஆம் என்றே இருக்கும். ஏனென்றால் இவற்றில் அதிக நார்ச்சத்து, குறைந்த கொழுப்பு, அதிக சத்தான பொருட்கள் மற்றும் புரதச் சத்து இருப்பதால் நகல் இறைச்சி உணவானது உடலுக்குக் கெடுதல் விளைவிக்காதது என்று சொல்லலாம். எந்த ஒரு பதப்படுத்தப்பட்ட உணவாக இருந்தாலும் அளவுடன் சாப்பிடும் பொழுது அவை உடலுக்கு கேடு விளைவிக்காது என்பதை நினைவில் கொள்ளலாம். எலும்பு இல்லாத சிவப்பு இறைச்சி அதாவது போன்லெஸ் ரெட் மீட் என்பது தோற்றத்தில் அப்படியே அசல் இறைச்சியை ஞாபகப்படுத்தும் விதமாக உள்ளது. சோயா மாவு, பட்டாணி புரதம், கீண்வா மாவு, அரிசி மாவு மற்றும் ஆளி விதைத்தூள் இவற்றைக் கொண்டே எலும்பில்லாத சிவப்பு இறைச்சியானது தயாரிக்கப்படுகின்றது. 

 பலாப்பழத்தைக் கொண்டு செய்யப்படும் இறைச்சியும் தோற்றத்தில் அசல் கோழி இறைச்சியுடன் போட்டி போடும் அளவிற்கு உள்ளது. இவற்றை அப்படியே சூடு செய்து சாப்பிடும் உணவாகத் தயாரித்து இருக்கிறார்கள். சில நிமிடங்களிலேயே சூடு செய்து சாப்பிடக்கூடிய இவ்வகை இறைச்சியானது சப்பாத்தி, சேன்ட்விச் அல்லது சாலட்டுகளில் பயன்படுத்த ஏதுவானது. மாக் மீட்டில் வாத்து மற்றும் மீன் உணவுகளும் கிடைக்கின்றன. சோயாவினால் செய்யப்படும் வாத்து மற்றும் மீன் இறைச்சியானது சுவையாகவும், சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கின்றன. 

சோயா எண்ணெய், சோயாப் புரதம், சோயா பால், கோதுமைப் புரதம், கோதுமை மாவுச்சத்து இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் நகல் வாத்துக்கறி, நகல் மீன்ஃபில்லெட்ஸ் மற்றும் நகல் மிளகு சலாமி போன்றவை அசல் இறைச்சி உணவுகளுக்கு சவால் விடும் விதமாக உள்ளன. பெரும்பாலான நட்சத்திர அந்தஸ்து கொண்ட உணவகங்களில் நகல் இறைச்சிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பர்கர்கள், சான்விச், சாலட்டுகள், பிரியாணி மற்றும் ஆடு, கோழி, வாத்து மற்றும் மீன் உணவுகளில் பல்வேறு வகைகளும் பரிமாறப்படுகின்றன. 

 அசைவப் பிரியர்களாக இருந்து சைவ உணவிற்கு மாறியவர்களுக்கும், இனிமேல் மாறப்போகின்றவர்களுக்கும், அசைவ உணவு சாப்பிட முடியாத வயதானவர்களுக்கும், சைவ உணவில் மாற்றத்தை விரும்புபவர்களுக்கும் மட்டுமல்லாது சைவ மற்றும் அசைவ உணவுகளை உண்பவர்களுக்கும் கூட இவை ஒரு அசத்தலான அதே சமயம் ஆரோக்கியமான இறைச்சி என்று சொல்லலாம்.

Post a Comment

أحدث أقدم

Search here!