உடல் நலம் தரும் வார்ப்பிரும்பு சமையல் பாத்திரங்கள் வார்ப்பிரும்பில் சமையல் செய்து சாப்பிடும் பொழுது உடலுக்கு இரும்புச் சத்து கிடைக்கின்றது என்பதை அறிவோம். 

ஆனால், நம்மில் பலருக்கு வார்ப்பிரும்பு என்பது ’கேஸ்ட் அயர்ன்’ என்ற சொல்லினால் அழைக்கப்பட்டால் மட்டுமே தெரியக்கூடிய ஒன்றாக உள்ளது. தோசைக்கல், பனியாரக்கல், ஆப்பக்கடாய், பெரிய ஆழமான வாணலி, பெரிய ஏந்திய வாணலி, நடுத்தர மற்றும் சிறிய வாணலிகள், பேன்கள், ஸ்கிலட், தாளிப்புக் கரண்டி, கிரில் பேன், ஊத்தப்பக்கல், பெரிய மற்றும் சிறிய அளவுகளிலும் கிடைக்கக்கூடிய குழம்புப் பாத்திரங்கள், சமைத்த உணவு அதிக நேரம் ஆறாமல் வைத்திருக்கக்கூடிய கோஸிரோல், சாஸ்பேன், பிரியாணி பாத்திரம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். 

 இதில் பிடியுடன் வரும் பாத்திரங்களுக்கு வார்ப்பிரும்பில் மட்டுமல்லாமல் மரத்திலும் பிடியானது இருப்பது போன்று விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல் தோசைக்கல், தவா போன்றவற்றைப் பிடிக்க ஏதுவாக ஒரு பக்கம் நீளமான பிடியும் எதிர்ப்புறம் சிறிய பிடியும் இருப்பது போன்ற பாத்திரங்களும் கிடைக்கின்றன. ஆப்பக்கடாய், வாணலி, குழம்புப் பாத்திரம் மற்றும் சாஸ்பேன் போன்றவற்றிற்கு கண்ணாடி மூடி மற்றும் ‘கேஸ்ட் அயர்ன்’ மூடிகளுடன் கிடைக்கின்றன. நமக்கு விருப்பமானவற்றை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். வார்ப்பிரும்பு பாத்திரங்களின் நன்மைகள்:- 

 * முறையாகப் பதப்படுத்தப்பட்ட (சீஸனிங்) வார்ப்பிரும்பு பாத்திரங்களில் சமைக்கும் பொழுது இயற்கையாகவே அவை நான்ஸ்டிக் பாத்திரங்களாகச் செயல்படுகின்றன. இவற்றில் சமைக்கப்படும் உணவுப் பொருள்கள் பாத்திரங்களில் ஒட்டுவதில்லை. * எளிதில் சுத்தப்படுத்தக்கூடிய பாத்திரமாக இவை இருப்பது மற்றுமொரு சிறப்பாகும். 

 * வார்ப்பிரும்பு பாத்திரங்களில் அமைக்கப்படும் உணவுப் பொருட்கள் இரும்புச்சத்தினால் வலுவூட்டப்படுகின்றன. இதனால் நம் உடலுக்கும் இயற்கையான, ஆரோக்கியமான இரும்புச் சத்தானது கிடைக்கின்றது. 

 * மற்ற விலையுயர்ந்த பாத்திரங்களோடு ஒப்பிடும்பொழுது இந்தப் பாத்திரங்களின் விலை நியாயமான ஒன்றாகவே இருக்கின்றது. 

 * பல ஆண்டுகள் நம்முடனேயே பயணிக்கக்கூடிய வகையில் உறுதியான, வலுவான, அழியாத பாத்திரங்களாக இவை உள்ளன. தலைமுறைகள் கடந்தும் பலன்தரும் பாத்திரங்கள் என்பதற்குப் பொருத்தமானதாக இவை இருக்கின்றன. 

 * இவை கையாள்வதற்குக் கனமாக இருப்பதால் சமைத்த உணவை அதிக நேரம் சூடாக வைக்கின்றன. 

 * இவை வெப்பத்தை சிறந்த முறையில் தக்க வைத்துக் கொள்வதால் சைவ மற்றும் அசைவ உணவு வறுவலுக்கும், கேரமலைசிங் உணவுகளுக்கும் குறிப்பாக அனைத்து வகையான அசைவ உணவுகளைச் சமைப்பதற்கும் ஏற்ற வகையில் உள்ளன. வார்ப்பிரும்பு (கேஸ்ட் அயர்ன்)- பதப்படுத்துவது எப்படி? கேஸ்ட் அயர்ன் பாத்திரங்களானவை பதப்படுத்தியவை (சீஸன்டு), பதப்படுத்தாதவை (ப்ரீ சீஸன்டு) என இரண்டு வகையாகவும் கடைகளில் கிடைக்கின்றன. இவை இரண்டிற்குமிடையே விலையில் வித்தியாசம் இருக்கும். பதப்படுத்தாதவற்றை அதாவது பழக்கப்படுத்தாதவற்றை வாங்கி நாமே வீட்டில் பழக்கப்படுத்தியும் உபயோகிக்கலாம். 

 * கேஸ்ட் அயர்ன் பாத்திரங்களில் முதலில் சூரியகாந்தி அல்லது கானோலா எண்ணெயை ஊற்றி தேய்த்து விட வேண்டும். அதிகப்படியாகப் பாத்திரத்தில் இருக்கும் எண்ணெயை பேப்பர் டவலினால் துடைத்து எடுக்க வேண்டும். * ஓவன் அல்லது அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும். இப்படி ஒன்றிரண்டு முறை எண்ணெயை துடைத்து வைத்து நன்கு சூடுபடுத்தும்பொழுது அவை பழகி விடுகின்றன. 

 பராமரிப்பு:- 

 * சமைத்து முடித்த உடனேயே பாத்திரம் வெதுவெதுப்பாக இருக்கும் பொழுதே அதை சுத்தப்படுத்தினால் அதனைக் கழுவுவது எளிதாக இருக்கும். 

 * கேஸ்ட் அயர்ன் பாத்திரங்களைத் தண்ணீரில் ஊற வைத்துக் கழுவக் கூடாது. * மிகவும் மென்மையான பாத்திரம் சுத்தம் செய்யும் சோப்பைக் கொண்டு கழுவுவது சிறந்ததாகும். 

 * பாத்திரத்தில் கெட்டியாக ஒட்டியிருக்கும் உணவுப் பொருளை அகற்ற எண்ணெய் மற்றும் உப்பைக் கொண்டு தேய்க்க வேண்டும். 

 * பாத்திரத்தைக் கழுவி துடைத்து அது காய்ந்த பின் சிறிதளவு எண்ணெயால் துடைத்து வைக்க வேண்டும். இல்லையென்றால் பாத்திரத்தைக் கழுவிய பிறகு அடுப்பில் வைத்து பாத்திரம் சூடேறிய பிறகு சிறிதளவு எண்ணையை பாத்திரம் முழுவதும் தேய்த்து வைக்க வேண்டும். 

 * அதே போல் ஈரமில்லாத இடத்தில் இந்தப் பாத்திரங்களை வைப்பது நல்லது. * சமைத்த உணவுகளை கேஸ்ட் அயர்ன் பாத்திரத்திலேயே வைக்காமல் அவற்றை உடனடியாக வேறு பாத்திரத்திற்கு மாற்றி விட வேண்டும்.

Post a Comment

أحدث أقدم

Search here!