கல்லூரிகளில் வெறும் கல்விப்பாடமாக மட்டுமே இருந்த சாஃப்ட் ஸ்கில், இன்று பெரும்பாலான அலுவலகங்களில் மிகமுக்கிய பங்காற்றுகிறது. ஏன்..? இளைஞர்களின் வேலைவாய்ப்பிலும் பங்கு வகிக்கிறது. அத்தகைய மென் திறன் அறிவு பற்றியும், அதன் அவசியம் பற்றியும் விளக்கமாக பேசுகிறார், சவுந்தரிய நாயகி. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவரான இவர், முன்னாள் கல்லூரி பேராசிரியை. இப்போது சாஃப்ட் ஸ்கில் தொடர்பான ஆய்வுகளை நடத்தி, அதை அலுவலகம்-கல்லூரி என நிஜ வாழ்க்கையோடு பொருத்தி பார்க்கிறார். 

அவருடைய ஆய்வுகளில் கிடைத்த சுவாரசியமான தகவல்களில் சில, இதோ.... சாஃப்ட் ஸ்கில் என்றால் என்ன? நம்மை மென்மையாக, மேன்மையாக வெளிக்காட்டக்கூடிய திறன்கள்தான், சாஃப்ட் ஸ்கில்ஸ். மென் திறன் எப்படி வெளிப்படும்? புன்னகை, முகபாவனை, உடை நாகரிகம், உடல்மொழி, பேசும்மொழி, குரல் ஒலியின் ஏற்ற இறக்கம்... இப்படி பலவற்றிலும் சாஃப்ட் ஸ்கில் வெளிப்படும். அது தானாக வெளிப்படும் என்பதைவிட, நாம் தான் நம்முடைய மென் திறனை வெளிப்படுத்துகிறோம் என்பதால்தான், மென்திறன் பயிற்சி அவசியமாகிறது. 

எவையெல்லாம் மென் திறனாக கருதப்படும்? அலுவலக மேலாளர் ஒருவர் தன்னுடைய சக பணியாளர்களுடனும், மேலதிகாரிகளிடமும் அலுவலக ரீதியாக ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும். அதுதான் மரியாதையும்கூட. ஆனால் அதே ஆங்கில தோரணையை, தன்னுடைய பியூன் மற்றும் டிரைவரிடம் காட்டும்போதுதான் அவருடைய மென்திறன் அறிவு காணாமல் போகிறது. எதை யாரிடம் பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், எந்த மொழியில் பேச வேண்டும், யார் முன்னிலையில் எப்படி நடந்து கொள்ளவேண்டும், 

எப்படி உடை அணியவேண்டும், எத்தகைய முகபாவனை செய்ய வேண்டும்... இப்படி உங்களை முன்னிலைப்படுத்தும் எல்லா விஷயங்களும், அது சார்ந்த முடிவுகளும் மென் திறனாக கருதப்படும். மென் திறன் ஏன் அவசியமாகிறது? பணியிடத்தில் அலுவலக பொறுப்புகளை தாண்டி, உறவுகளை வளர்க்கவும், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவும் மென் திறன் அறிவு அவசியமாகிறது. இப்போது பெரும்பாலான நேர்காணல்களில் தொழில்நுட்ப அறிவு, மொழி அறிவோடு சேர்த்து மென் திறன் அறிவு குறித்த கேள்விகளும் கேட்கப்படுகின்றன. இவையே வேலைவாய்ப்பையும், பதவி உயர்வையும் தீர்மானிக்கின்றன. சாஃப்ட் ஸ்கில் பற்றிய புரிதல் இளைஞர்களுக்கு இருக்கிறதா? 

முழுமையான புரிதல் இல்லை. மாறாக, ஆங்கில மொழி அறிவும், சரளமான ஆங்கில பேச்சுத்திறனும்தான் சாஃப்ட் ஸ்கில் என்ற தவறான புரிதலை நிறைய மாணவர்கள் வளர்த்து கொண்டுள்ளனர். உண்மையில், ஆங்கில மொழி அறிவு என்பது மென் திறன் அறிவின் மிகச்சிறிய பகுதி மட்டுமே. ஆங்கிலம், தமிழ், இந்தி, பிரெஞ்ச்... இப்படி எந்த மொழியாக இருப்பினும், சரளமாக, நிதானமாக, மரியாதையோடு பேசினால் நீங்களும் சாஃப்ட் ஸ்கில் எக்ஸ்பெர்ட்தான். கூடவே, பிறர் முன்னிலையில் மரியாதையோடு நடந்து கொள்ளும் பழக்கத்தையும் சேர்த்து கொண்டால், புரோபெஷனல் சாஃப்ட் ஸ்கில் பெர்சனாக மாறிவிடலாம். 

எப்படி வளர்த்து கொள்வது? நிறைய செமினார்களில் கலந்து கொள்ளுங்கள். அலுவலக மீட்டிங், கல்லூரி பிரசெண்டேஷன், உயர் அதிகாரிகளுடனான சந்திப்பு... இதுபோன்ற தருணங்களில்தான், பிறரது மென்திறன் அறிவை பார்த்து, வளர்த்து கொள்ள முடியும். மென் திறனின் முக்கியத்துவம் என்ன? அதிகாரம், அலுவலக பொறுப்பு, சம்பளம், மேலதிகாரி-உதவியாளர்... இவ்வளவு பாகுபாடுகளுக்கு மத்தியில், கொஞ்சமாவது மனிதத்தை வளர்ப்பதற்கு, சாஃப்ட் ஸ்கில் அவசியமாகிறது.

Post a Comment

أحدث أقدم

Search here!