வீட்டுக்கடனை வேறு வங்கிக்கு மாற்ற முடியுமா?

வங்கிகள் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதங்களை குறைத்து வரும் காலம் இது. ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமாக வட்டிக் குறைப்பு செய்து வருகின்றன. சில வங்கிகள் 0.50 சதவீதம் வரையிலும், சில வங்கிகள் 0.25 சதவீதம் என்ற அளவில் குறைத்துள்ளன. வட்டி விகிதம் குறைவதற்கு ஏற்ப தவணை தொகையும் குறையும் என்பதால் வட்டிக்குறைப்பை எப்போதுமே வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பார்கள். வீடு வாங்கி கடனை கட்டிக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இப்போது ஒரு சந்தேகம் வரும். அதிகம் வட்டிக்குறைத்த வங்கிக்கு வீட்டுக்கடனை மாற்றி விடலாமா என்ற எண்ணம் வரும். 

வீட்டுக்கடனை ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு எப்படி மாற்றுவது? முதலில் வீட்டுக் கடனை வாங்கிய வங்கியிலிருந்து வேறொரு வங்கிக்கு வீட்டுக் கடனை மாற்றிக்கொள்வது, இப்போது மிக எளிதான விஷயம். கடனை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்ற, முதலில் கடன் பெற்ற வங்கியிடம், கடன் பரிமாற்றக் கோரிக்கையை விண்ணப்பமாகக் கொடுக்க வேண்டும். 

சம்பந்தப்பட்ட அந்த வங்கி, உங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கும். பின்னர் நிலுவைத் தொகையைக் குறிப்பிட்டு ஓர் அறிக்கையை அதனுடன் இணைத்து ஒப்புதல் கடிதம் அல்லது ஆட்சேபனை இல்லாச் சான்றிதழை அளிக்கும். அந்த ஆவணங்களை புதிதாக கடன் வாங்க விரும்பும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையை ஆய்வு செய்த பின் உங்களுடைய கடனுக்கு புதிய வங்கி ஒப்புதல் அளிக்கும். பழைய வங்கி உங்களுடைய பழைய கடனை முடித்து வைக்கும். இந்த நடைமுறை முடிந்தபிறகு சொத்துப் பத்திரங்கள் புதிய வங்கியிடம் ஒப்படைக்கப்படும். 

வங்கி அல்லது வீட்டு நிதி நிறுவனம், அதன் பின்னர் தங்களுடைய நடைமுறை வட்டி விகிதத்தில் கடன் வழங்கும். அதுமட்டுமல்ல, நீங்கள் மீண்டும் கடனுக்கான செயலாக்க கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். புதிய வங்கிக்கு உங்கள் சொத்து பத்திரங்களை மாற்றும்போது பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செலவும் உங்களுடையதுதான், என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். வீட்டுக்கடனுக்கு தற்போது இருக்கும் திருப்பிச் செலுத்தும் முறையையும், அது போல் புதிய கடன் வாங்கினால் அதைத் திருப்பிச் செலுத்தும் முறை, அதன் வட்டி மற்றும் இதர கட்டணங்கள் போன்றவற்றையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 

இதர கட்டணங்கள் எல்லாவற்றையும் பார்த்து வங்கி மாறுவது பற்றி முடிவு எடுக்கலாம். வட்டிக் குறைவாக இருக்கிறதே என்பதை மட்டும் பார்த்து புதிய வங்கிக்கு மாறுவது நல்லதல்ல, என்றே வங்கியாளர்கள் கூறுகிறார்கள். வீட்டுக்கடன் வாங்கி ஆண்டு கணக்கில் மாதத்தவணை செலுத்திக் கொண்டிருப்பவர்கள் உடனடியாக வேறு வங்கிக்கு மாறிவிட முடியாது. உடனடியாக இன்னொரு வங்கிக்கு மாறும்போது அவரது நம்பகத்தன்மை கேள்விகுறியாகிவிடும் என்றும் வங்கித்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

Post a Comment

أحدث أقدم

Search here!