கணித ஆய்வுகளுக்காக வாழ்ந்த பெண்மணி 

கல்விச்சாலையின் நிழலில்கூட ஒதுங்காமல், அறிவுச்சுடராக ஒளிர்ந்த மேதைகளின் பட்டியல் மிகவும் பெரியது. அந்த பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்த பெண்மணி, கணித மேதையான மேரி சோபி ஜெர்மெய்ன். பேங்க் ஆப் பிரான்சில் இயக்குநராக இருந்த அம்புரோஸ் பிரான்சுவாஸ் என்பவருக்கு மகளாக 1776-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி சோபி பிறந்தார். 

பிரெஞ்சு புரட்சியின் தொடக்க காலகட்டமான அன்றைய சூழலில் பெண்கள் கல்வி கற்க அனுமதி இல்லை. ஆனாலும், சோபி சுயமாக மொழியை கற்றுக்கொண்டார். அம்புரோஸ் தனது வீட்டில் நூலகம் ஒன்றை அமைத்திருந்தார். அதனால் சிறு வயது முதலே நிறைய புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு சோபிக்கு வாய்த்தது. குறிப்பாக ஹிஸ்டரி ஆப் மேத்தமேடிக்ஸ் நூலை விரும்பி படித்தார். அதில்தான் ஆர்க்கிமிடிஸின் துயர மரணம் குறித்து அவர் அறிந்துகொண்டார். தன்னை கொல்ல வந்தவனைக்கூட கவனிக்க முடியாத அளவுக்கு கணிதம் அத்தனை சுவாரசியமானதா? என்று வியப்படைந்த சோபி, அதன் பிறகு கணித நூல்களை வாசிக்கத் தொடங்கினார். 

 1794-ம் ஆண்டு பாரீசில் தொழில்நுட்பக்கல்லூரி தொடங்கப்பட்டது. ஆனால், பெண் என்கிற காரணத்தால் சோபியை கல்லூரியில் சேர்க்க நிர்வாகம் மறுத்துவிட்டது. சோர்ந்து போயிருந்த சோபிக்கு ஒரு வழி கிடைத்தது. வீட்டிலிருந்தபடியே கற்கும் பாடத்திட்டத்தில் சேர்ந்திருந்த ஆண்டனி அகஸ்ட் பிளாங்க் என்கிற மாணவன் சில காரணங்களால் பாரீஸ் நகரை விட்டு வெளியே செல்ல நேரிட்டது. அதையறிந்த சோபி அவரது பெயரில் பாடங்களை பெற்று கற்க தொடங்கினார். அட்ரின் மேரி லெகந்தர் என்பவர் எழுதிய நூல் ஒன்றில் பெர்மட் எண்ணியல் தேற்றத்தின் இறுதி சமன்பாட்டை (FLT) தீர்க்கவே முடியாது, என்று குறிப்பிட்டிருந்தார். 

சோபி அதை சவாலாக எடுத்துக்கொண்டு, அதை தீர்க்கும் வழியை கண்டுபிடித்தார். Xn + Yn = Zn என்கிற சமன்பாட்டுக்கான தீர்வுதான் கணித உலகம் சோபியை திரும்பிப்பார்க்க காரணமாக அமைந்தது. பிற்காலத்தில், உலோகங்களின் நீட்சி குறித்த அவரது கணித நிரூபணங்கள் அவரை பற்றிய மதிப்பை உயர்த்தின. அவருக்கு பிரான்சின் புகழ்பெற்ற இன்ஸ்டிடியூட் ஆப் அகாடமி அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டது. அந்த அமைப்பின் உறுப்பினர் அந்தஸ்து பெற்ற முதல் பெண் சோபிதான். இதைத்தவிர அவருக்கு எவ்வித கவுரவமும் அவர் உயிருடன் இருக்கும்வரை வழங்கப்படவில்லை. 

 திருமணமே செய்துகொள்ளாமல் கணித ஆய்வுகளிலேயே தனது வாழ்க்கையை செலவிட்ட சோபி, இறுதி காலத்தில் புற்றுநோயால் நலிவடைந்தார். 1831-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந் தேதி அவர் காலமானார். அவர் இறந்து 6 ஆண்டுகளுக்கு பின் காடிங்கன் பல்கலைக்கழகம் சோபிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

Post a Comment

أحدث أقدم

Search here!