கணிதம் படிக்கும் மாணவர்களுக்கு என்னென்ன வேலைவாய்ப்புகள் இருக்கின்றன? 

கணிதம் பாடத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு (B.Sc.,/M.Sc.,) முடித்தவர்களுக்குப் பல்வேறு துறைகளில் இருக்கும் வேலைவாய்ப்புகள் குறித்தத் தகவல்களை இங்கு வழங்குகிறோம். கணிதப் பாடத்தைக் கடினமானது என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், கணிதப் பாடம் எளிமையானது. கணிதத்தைப் புரிந்து படித்தால், எளிதில் முழுமையான மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம். மற்றப் பாடங்களைப் போல் மனப்பாடம் செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை. கல்லூரிகளில் கணிதப் பாடத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடம், அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டால், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் சொல்லும் ஒரே பதில், அடுத்து ஆசிரியர் கல்விக்கான பட்டப்படிப்பைப் முடித்துக் கணித ஆசிரியராக வேண்டுமென்பதாகவே இருக்கும். கணித ஆசிரியர் பணி கிடைக்காவிட்டாலும், தனியார் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தனிப்பயிற்சி அளித்து, அதன் வழியாகக் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும் என்றும் அவர்கள் சொல்வதுண்டு. 

கணித ஆசிரியர் பணியினை விடுத்து, சிலர் வங்கிப் பணிகளுக்கு விரும்பிச் செல்கின்றனர். மிகச் சிலர் பட்டயக் கணக்காளர்கள் (Chartered Accountant) தேர்வு எழுதி கணக்காளர்களாகச் செல்கின்றனர். மற்றவர்களெல்லாம், போட்டித் தேர்வுகளை எழுதி அரசுப் பணிகளுக்கு செல்ல வேண்டுமென்று போராடிக் கொண்டிருக்கின்றனர். கணிதம் படித்தவர்களுக்கு இந்தப் பணிகள் மட்டும்தான் இருக்கிறதா? பன்னாட்டு நிறுவனங்களில் (Multi National Companies) வேலைகள் எதுவும் இல்லையா? என்று சிலர் கேட்பதுண்டு. அவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, கணிதம் பாடத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு (B.Sc.,/M.Sc.,) முடித்தவர்களுக்குப் பல்வேறு துறைகளில் இருக்கும் வேலைவாய்ப்புகள் குறித்தத் தகவல்களை இங்கு வழங்குகிறோம். இதேபோல வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க... இங்கே க்ளிக் செய்யவும். 

புள்ளியியலாளர் 

அரசு மற்றும் தனியார் துறைகளில் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்துவதற்கும் புள்ளிவிவரங்கள் (Statistics) தேவையாக இருக்கின்றன. மக்கள் தொகை புள்ளிவிவரங்கள், குற்றம் (Crime), உடல் நலம் (Health), வணிகம் (Business), விபத்துகள் மற்றும் காப்பீடு (Accident and Insurance), சூழலியல் (Environment), விவசாயம் (Agriculture), அரசியல் (Political) என்று பல்வேறு துறைகளில் புள்ளியியல் வல்லுநர்கள் தேவை அதிகமிருக்கிறது. இதேபோன்று நிதி (Finance), வங்கி (Bank), சந்தைப்படுத்தல் (Marketing), உற்பத்தி சோதனை (Product Testing) போன்றவைகளுக்கும் புள்ளியியலாளர்களின் தேவை இருக்கிறது. இந்தப் புள்ளியியலாளர் (Statistician) பணிகளுக்குப் புள்ளியியல் படிப்பைப் படித்தவர்கள் மட்டுமின்றி, கணிதம் படித்தவர்களும் அதிக அளவில் தேர்வு செய்யப்படுகின்றனர். 

கணிதவியலாளர் 

கணினி, அலைபேசி, செயற்கைக்கோள், இணையம் என்று அனைத்தின் பின்னனியிலும் கணிதம் மற்றும் கணிதவியலாளர்களின் பங்கு அதிக அளவில் இருக்கின்றன. கணிதவியலாளர்களின் எண்களில் நெரித்தல் (Number Crunching), பகுப்பாய்வு பகுத்தறிதல் (Analytical Reasoning), உய்யச்சிந்தனை (Critical Thinking) போன்ற திறன்களால் நவீன உலகில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 

கணிதக் கோட்பாடுகள் மற்றும் வழிமுறைகளில் கணிதவியலாளர்கள் சிறப்பு பெற்றிருப்பது போல், கருத்தியல் கணிதவியலாளர்கள் (Theoretical Mathematicians) புதிய கோட்பாடுகளை உருவாக்குவதிலும், முந்தையக் கருத்துகளை மதிப்பீடு செய்வதிலும் திறனுடையவர்களாக இருக்கின்றனர். வணிகம் (Business), வானியல் (Astronomy), காலநிலை ஆய்வு (Climate Study), எந்திரனியல் (Robotics), பாதுகாப்பு (Defense), உயிரியல் மற்றும் மரபியல் (Biology and Genetics), நிதி (Finance) போன்ற துறைகளில் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கான பணிகளை மேற்கொள்வதற்காகப் பயன்பாட்டுக் கணிதவியலாளர்கள் (Applied Mathematicians) தேவை இருக்கிறது. மேற்காணும் அனைத்துக் கணிதவியலாளர் பணிகளுக்கும் கணிதம் படித்தவர்களே தேர்வு செய்யப்படுகின்றனர். 

செயல் உகம ஆய்வியல் பகுப்பாய்வாளர் 

பொருள், தொழிலாளர்கள், இயந்திரங்கள், நேரம் மற்றும் பணம் போன்ற வளங்களின் திறமையான ஒதுக்கீட்டைக் கையாளவும், சிக்கலான பிரச்னைகளைத் தீர்ப்பதற்குமான தொழில் வல்லுநர்களைச் செயல் உகம ஆய்வியல் பகுப்பாய்வாளர் (Operations Research Analyst) என்று அழைக்கின்றனர். விநியோகம், போக்குவரத்து, உற்பத்தி, தளவாடங்கள், விநியோகச் சங்கிலி, சரக்கு மேலாண்மை, திட்டமிடல் போன்ற பகுதிகளில் வணிக உத்திகள் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காகக் கணித நுட்பங்களைப் பயன்படுத்தும் செயல் உகம ஆய்வியல் பகுப்பாய்வாளர் (Operations Research Analyst) தேவை அதிகமாக இருக்கிறது. இப்பணிகளுக்குக் கணிதம், புள்ளியியல், பொறியியல் படித்தவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களில் கணிதம் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

காப்பீட்டு அறிவியலாளர் 

நிதி இடர்கள், வணிக இடர்கள் அல்லது காப்பீட்டு இடர்கள் போன்ற நிறுவனங்களுக்கான அனைத்து வகையான இடர்களையும் கணக்கிட்டுச் சிக்கலான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும், தகுந்த கொள்கைகளை உருவாக்குவதற்குமான துறையாகக் காப்பீட்டு அறிவியல் துறை இருந்து வருகிறது. உதாரணமாக, இதயநோய், புற்றுநோய் போன்ற நீண்டகால நோய்களுக்கான சாத்தியக் கூறுகளைக் கணக்கிட்டு, ஒரு குறிப்பிட்ட ஆயுள் காப்பீட்டுக் கொள்கைக்கான தவணைத் தொகை முடிவு செய்வதற்கான வல்லுநர்கள் தேவை இருக்கிறது. நிதி, வங்கி, காப்பீடு, உடல்நலம் மற்றும் பெருநிறுவனக் கொள்கை போன்ற பல்வேறு துறைகளில் வணிகம், புள்ளியியல் மற்றும் தரவுகள் போன்றவைகளைப் பயன்படுத்தி நிச்சயமற்ற மற்றும் விரும்பத்தகாத எதிர்கால நிகழ்வுகளின் இடர்களைக் கணக்கிடுவதற்கான வல்லுநர்களின் தேவை இருக்கிறது. மேற்காணும் பணிகளுக்குக் கணிதம், புள்ளியியல், வணிகவியல், பொருளாதாரம் போன்ற படிப்பு முடித்தவர்களின் தேவை இருக்கிறது. இப்படிப்புகளில் கணிதம் படித்தவர்களுக்கே அதிகமான வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதேபோல உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்கள்! 

தரவு ஆய்வாளர்கள் 

வணிக நிறுவனங்களில் விற்பனைப் புள்ளிவிவரங்கள், போக்குவரத்துச் செலவுகள், நுகர்வோர் புள்ளிவிவரங்கள் அல்லது இணைய தேடல் போன்ற பல்வேறு தரவுகளைக் (Data) கொண்டு பகுப்பாய்வு செய்து, வணிகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான முடிவுகளை எடுப்பதற்கான தரவு ஆய்வாளர் (Data Analyst) பணிகள் அதிக அளவில் இருக்கின்றன. உற்பத்தியைத் தொடங்குதல் மற்றும் மேம்படுத்துதல், வணிக் உத்திகளை உருவாக்குதல், வணிகத்தில் இலாபத்தை அதிகரித்தல் போன்ற பல்வேறு செயல்முறைகளைச் செயல்படுத்திடவும் தரவு ஆய்வாளர்கள் (Data Analysts) உதவுகின்றனர். இதேபோன்று, பெரும் தரவு (Big Data) எனும் துறை, கணினி போன்ற கருவிகளால் செயலாக்க முடியாத பெரிய அளவிலான தரவுகளைக் கையாளக் கூடியதாகும். 

இத்துறைகளில் வல்லுநர்கள் எண்கள், தரவு மற்றும் புள்ளியியல் கருவிகளுடன் நீண்ட நேரம் நாள் முழுவதும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இப்பணிகளில் எண்கள் மீது அதிக விருப்பமுடையவர்கள் மட்டுமே ஆர்வமுடன் ஈடுபட முடியும். மேற்காணும் தரவு ஆய்வாளர், பெரும் தரவு ஆய்வாளர் பணிகளுக்குக் கணிதம், புள்ளியியல், பொறியியல், தரவு அறிவியல் படிப்பு படித்தவர்களின் தேவை இருக்கின்றன. இங்கும் கணிதம் படித்தவர்களுக்கே அதிக வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. 

சந்தை ஆய்வாளர் 

ஒரு வணிக நிறுவனம் தாங்கள் உற்பத்தி செய்து வரும் ஒரு பொருளினைச் சிறிது மாற்றம் செய்து புதிய பெயரில் சந்தைப்படுத்த விரும்பும் நிலையில், சந்தை ஆய்வினை மேற்கொள்கிறது. இதே போன்று, அரசியல் கட்சிகள் தங்களது கட்சிக்கு எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்காத நிலையில், தங்கள் கட்சியின் தோல்விக்கான காரணத்தை அறிய மக்களிடம் ஆய்வினை மேற்கொள்கிறது. மக்களின் விருப்பு, வெறுப்புகளைக் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வில் பெறப்படும் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு, சந்தை நிலைமைகள், போட்டியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பற்றிய தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வு செய்து, நிறுவனங்களுக்குத் தேவையான வணிகத் திட்டத்தை உருவாக்கவும், விளம்பரங்களை வடிவமைக்கவும் மற்றும் அவர்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்தவும் உதவுகிறது. அரசியல் கட்சிகளெனில் மக்கள் ஆதரவைப் பெறுவதற்கான திட்டத்தை உருவாக்கவும், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் உதவும் வகையில் சந்தை ஆய்வாளர்கள் (Market Researcher) பணிகள் இருக்கின்றன. இப்பணிகளுக்குக் கணிதம், புள்ளியியல், பொருளாதாரம், உளவியல் படித்தவர்களின் தேவை இருக்கிறது. 

இருப்பினும், இங்கு கணிதம் படித்தவர்களுக்கே அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. மேற்காணும் பணிகளுக்கு அரசுப்பணியில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்களைக் காட்டிலும் பன்மடங்கு சம்பளம் அதிகமாகக் கிடைக்கும் என்பதால், கணிதம் படித்தவர்கள் மேற்காணும் பணிகளுக்கு முயற்சிக்கலாம். கணிதம் பாடத்தைப் படித்து அரசுப் பணிகளுக்கு மட்டும் முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள், அந்த வாய்ப்பு கிடைக்கும் வரை மேற்காணும் பணிகளில் சேர்ந்து அதிகமான வருமானத்தைப் பெற முடியும். நன்றி: விகடன் (இது ஒரு மீழ்பதிவு)

Post a Comment

أحدث أقدم

Search here!