10 லட்சம் பேர் எழுதிய குரூப்-2 தேர்வு முடிவு வெளியீடு 57,641 பேர் தேர்ச்சி 10 லட்சம் பேர் எழுதிய குரூப்-2, 2ஏ தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் 57 ஆயிரத்து 641 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். 


குரூப்-2, 2ஏ பதவிகள் குரூப்-2 நேர்முக தேர்வு பதவிகளான 11 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், 2 நன்னடத்தை அலுவலர்கள், 19 உதவி ஆய்வாளர்கள், 17 சார்பதிவாளர் நிலை-2 பணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான 8 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், ஒரு சிறப்பு உதவியாளர், 58 தனிப்பிரிவு உதவியாளர்கள் என மொத்தம் 116 இடங்களுக்கும், குரூப்-2ஏ நேர்முக தேர்வு அல்லாத பதவிகளில் வரும் 9 நகராட்சி பணியாளர் ஆணையர் நிலை-2 பணியிடங்கள், 291 முதுநிலை ஆய்வாளர்கள், 972 இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர்கள் உள்பட 5 ஆயிரத்து 413 இடங்களுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் 5 ஆயிரத்து 529 காலிப்பணியிடங்களுக்கான முதல்நிலைத்தேர்வு கடந்த மே மாதம் 21-ந் தேதி நடந்தது. 
இந்த தேர்வை எழுதுவதற்காக 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் எழுதினார்கள். தாமதமான தேர்வு முடிவு இந்த தேர்வு முடிவு கடந்த ஜூன் மாதமே வெளியிடப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து காலதாமதம் ஆகி வந்தன. கடந்த மாதத்தில் (அக்டோபர்) தேர்வு முடிவு வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 



அதற்கிடையில், சமூக வலைதளங்களில் குரூப்-2, 2ஏ தேர்வு முடிவுகள் தொடர்பான சில தகவல்களும் வெளியாகின. அதனைத்தொடர்ந்து மகளிருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான முறையை பின்பற்ற மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது என்றும், இந்த பணி நிறைவுற்ற பின்னர் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தது. 
 57,641 பேர் தேர்ச்சி இந்த நிலையில் இதற்கான தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. நேற்று இரவு வெளியிட்டது. அந்த வகையில் முதல்நிலை தேர்வு எழுதிய 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேரில், 57 ஆயிரத்து 641 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. முதன்மை தேர்வுக்கு தகுதியானவர்களின் தேர்ச்சி சதவீதம் 5.8 ஆகும். 
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். முதன்மைத் தேர்வுக்கு தகுதியானவர்கள் தேர்வு கட்டணமாக ரூ.200-ஐ இ-சேவை மையத்தில் வருகிற 17-ந் தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!